கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் பெற்ற வெற்றிகளிலேயே இதுதான் இரண்டாவது மிகப்பெரிய வெற்றியாகும்.
கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த பாஜக தோல்வியைத் தழுவியுள்ளது. இதற்கு மிகப்பெரிய காரணங்களாக ஊழல், ஹிஜாப், முஸ்லிம் இட ஒதுக்கீடு, வேலையில்லா திண்டாட்டம் என்று கூறப்படுகிறது. மேலும், காங்கிரசின் தேர்தல் அறிவிப்பால் கர்நாடகா மக்கள் ஈர்க்கப்பட்டு இருக்கின்றனர் என்ற பேச்சும் எழுந்துள்ளது.
ஆனாலும், பாஜகவில் இருந்து வலுவானவர்கள், மூத்த அரசியல்வாதிகள் ஓரம் கட்டப்பட்டதும் காரணமாக இருக்கலாம் என்ற கோணத்திலும் பார்க்கப்படுகிறது. பாஜகவில் இருந்து வெளியேறி காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்டவர்களில் ஜெகதீஷ் ஷெட்டார் தவிர மற்றவர்கள் அனைவரும் வெற்றி பெற்றுள்ளனர். முதன் முதலாக 2008 ஆம் ஆண்டில் பாஜக சார்பில் கர்நாடகாவில் முதல்வராக பொறுப்பேற்றவர் எடியூரப்பா. இதற்குப் பின்னர் பாஜகவின் முக்கிய தலைவராக கருதப்பட்டார். அவரும் கடந்த 2021ஆம் ஆண்டு முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு பசவராஜ் பொம்மை முதல்வராக்கப்பட்டார். இதுவும் கர்நாடகா மாநிலத்தில் பாஜகவுக்கு எதிராக மாறியது. தேர்தலுக்கு முன்பும் இவர் ஓரம் கட்டப்பட்டது மாநிலத்தில் சல சலப்பை ஏற்படுத்தி இருந்தது.
கர்நாடகாவில் அறுதி பெரும்பான்மை பெற்ற காங்கிரஸ்! அடுத்த முதலமைச்சர் யார்?
இந்த நிலையில் இன்று வெளியாகி இருக்கும் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு எதிர்பாராத தோல்வியையும், காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியையும் கொடுத்துள்ளது. லிங்காயத் தலைவரான ஜெகதீஷ் ஷெட்டாரின் தோல்வி அவருக்கான தனிப்பட்ட தோல்வியாகத்தான் பார்க்கப்படுகிறது. இவரை எதிர்த்து ஹூப்ளி தார்வார்ட் மத்தியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் மகேஷ் டென்கினகை 30000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த காலங்களுடன் காங்கிரசின் தேர்தல் வெற்றியை ஒப்பிடுகையில் தற்போது பெற்று இருக்கும் வெற்றி 1989ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.
* 1989ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி 178 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது. அதற்குப் பின்னர் தற்போது 136 இடங்களில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
* கர்நாடகாவில் காங்கிரஸ் தோல்வியை அடுத்து தென் மாநிலங்களில் பாஜகவின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
* காங்கிரஸ் அகில இந்திய தலைவராக மல்லிகார்ஜுனே கார்கேவை காங்கிரஸ் தேர்வு செய்து இருந்தது. அவரது தேர்வுக்குப் பின்னர் நடந்த முதல் தேர்தலில் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று அவருக்கு ஒரு அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. மண்ணின் மைந்தன் என்பதும் அவருக்கு கூடுதல் அந்தஸ்தை கொடுத்துள்ளது.
* கடந்த நாற்பது ஆணடுகளாக கர்நாடகா மாநிலத்தில் எந்தக் கட்சியும் மீண்டும் ஆட்சியை பிடித்தது இல்லை. அதேபோல் தான் தற்போது மக்கள் வாக்களித்துள்ளனர். பிரதமர் மோடி பாஜகவின் வெற்றிக்கு கடுமையாக உழைத்தார் என்றே கூறலாம். 19 பொதுக் கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களில் ஈடுபட்டு இருந்தார்.
* காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி தனது கட்சி 130 இடங்களைப் பிடிக்கும் என்றும், தென்னிந்தியா முழுவதும் பாஜக தனது ஆட்சியை இழக்கும் என்று தெரிவித்து இருந்தார்.
* ஜேடிஎஸ் கட்சியும் நடப்பு தேர்தலில் மோசமான வெற்றியை பெற்றுள்ளது. 1999ல் வெறும் பத்து இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இருந்த ஜேடிஎஸ் தற்போது வெறும் 20 இடங்களில் மட்டுமே வெற்றியை பெற்றுள்ளது.
* 2019 மக்களவை தேர்தலிலும் ஹெச்டி குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி தோல்வி அடைந்து இருந்தார். அதேபோல், இந்த தேர்தலிலும் தோல்வியை தழுவி இருக்கிறார்.
* கர்நாடகாவில் காங்கிரஸ் பெற்று இருக்கும் வெற்றியால் நடப்பாண்டு இறுதியில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காங்கிரசுக்கு கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன், தேசிய அளவில் 2024ல் நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் வலுவான கூட்டணியை அமைப்பதற்கு உதவும் என்று கூறப்படுகிறது.
* தென்னிந்திய மாநிலங்களில் ஒன்றில் கூட பாஜகவின் ஆட்சி இல்லை. இதனால் டுவிட்டரிலும் ''பாஜக முக்த்'', ''காங்கிரஸ் கம் பேக்'' என்ற வார்த்தை டிரண்டாகி வருகிறது.