
ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகளை காரில் துரத்தி கடத்த முயன்ற விவகாரத்தில் கைதான பா.ஜனதா தலைவர் சுபாஷ் பராலாவின் மகன் விகாஸ், போலீசார் சம்மனை ஏற்று நேற்று விசாரணைக்கு நேரில் ஆஜரானார், அப்போது அவர் கைது செய்யப்பட்டார்.
அரியானா மாநில பா.ஜனதா தலைவர் சுபாஷ் பராலாவின் மகன் விகாஸ்(வயது23). இவர் கடந்த வௌ்ளிக்கிழ முன் இரவு தனது நண்பரான ஆஷிஷ் குமார்(வயது27) என்பவருடன் சேர்ந்து பெண் ஒருவரை 5.கி.மீ. வரை பின்தொடர்ந்து விரட்டி, விரட்டி தொல்லை கொடுத்தார். பின் அவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரின் மகள் எனத் தெரியவந்தது.
அந்த பெண் கொடுத்த புகாரையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விகாஸ்பராலா மற்றும் அவரது நண்பரை கைது செய்தனர். அவர்கள் மீது மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட போதும் உடனே ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், ஐ.ஏ.எஸ். அதிகாரி இந்த விவகாரத்தில் பின்வாங்கப்போவதில்லை, முறைப்படி போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். இதற்கிடையே காரில் அந்த பெண்ணை துரத்தியபோது, நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராக்களை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதற்கிடயே பா.ஜனதா தலைவர் மகன் விகாஸை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு, செக்டர் 26 பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். காலை 11 மணிக்கு ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நண்பகல் 2 மணிக்கு மேல் விசாரணைக்கு ஆஜரானார்.
முன்னதாக போலீசார் இந்த சம்மனை விகாஸிடம் அளித்தபோது அதை வாங்க அவர் மறுத்துவிட்டார். இதனால், அந்த சம்மனை போலீசார் வீட்டின் முகப்புச் சுவற்றில் ஒட்டிவிட்டு வந்தனர்.
போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு விகாஸ் ஆஜராகிறார் என்கிற செய்தி அறிந்து போலீஸ் நிலையம் முன், ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்து போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, இந்த விவகாரத்தில் போலீஸ் டி.ஜி.பி. திஜேந்திர் சிங் லூத்ரா முதல்முறையாக ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது-
பெண்ணை காரில் துரத்தி கைதாகிய விகாஸ், அவரின் நண்பர் ஆஷ்ஸ் குமார் இருவரும், போலீசிடம் தங்களின் ரத்தம், சிறுநீர் மாதிரிகளை பரிசோதனைக்கு வழங்க மறுத்துவிட்டனர். இது விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாகும். இந்த விவகாரத்தில் அனைத்து விசாரணையும் வௌிப்படையாகவே நடந்து வருகிறது. இவர்கள் இருவரும் சட்டம் பயிலும்மாணவர்கள், இருந்தபோதிலும், அவர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டனர். இது நீதிமன்ற விசாரணைக்கும், காவலுக்கும் எதிரானதாகும். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைத்த அனைத்து வகையிலும் உதவி செய்வோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே காலையில் விசாரணைக்கு ஆஜராகாத பா.ஜனதா தலைவர் மகன் விகாஸ் , நண்பகலில் விசாரணைக்கு சண்டிகரில் உள்ள செக்டர் 26 போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர்.