
உத்தரப்பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு மக்கள் அளித்து வரும் வெற்றி, சாதி அரசியலுக்கும், ஊழலுக்கும் கொடுக்கும் சவுக்கடி என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குமான தேர்தல் நடந்து முடிந்து, வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. சமாஜ்வாதி-காங்கிரஸ் கூட்டணிக்கு பெரிய அதிர்ச்சியை அளித்த மாநில மக்கள், பாரதியஜனதா கட்சிக்கு அமோக ஆதரவை வாரி வழங்கி வருகின்றனர்.
403 தொகுதிகளில் பாரதியஜனதா கட்சி 309 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது, சமாஜ்வாதி-காங்கிரஸ் கூட்டணி 66 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்று வருகிறது.
இதனால், 15 ஆண்டுக்கு பின் மாநிலத்தில் மீண்டும் பாரதியஜனதா கட்சி அமையும் சூழல் நிலவி வருகிறது. ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலிலும் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றிய பாரதியஜனதா கட்சி இப்போது சட்டப்பேரவைத் தேர்தலிலும் வென்று ஆட்சியை கைப்பற்ற இருக்கிறது.
இது குறித்து மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், “ இது மிகச்சிறப்பான தருணம். இன்னும் சில மணிநேரத்துக்குள் அனைத்தும் தெரிந்துவிடும்.
பிரதமர் நரேந்திரமோடியின் தலைமையின் மீது மக்கள் நம்பிக்கையும், மதிப்பும் வைத்து இருக்றார்கள் என்பதை இது காட்டுகிறது. மக்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாரதியஜனதா கட்சிக் வாக்களித்து இருக்கிறார்கள்.
சாதி, மத அரசியலுக்கும், ஊழலுக்கும் மக்கள் சவுக்கடி கொடுத்து இருக்கிறார்கள். சிறந்த பணிக்கும், வளர்ச்சிக்கும் வாக்களித்து இருக்கிறார்கள். இளைஞர்கள், பெண்கள் மத்தியில் பாரதியஜனதா கட்சிக்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளது என தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறுகையில், “பிரதமர் மோடி மக்களின் கனவுகளை நனவாக்கி இருக்கிறார். மாநிலத்தில் இருந்து ஊழல், குற்றம், கொலை, மோசமான நிர்வாகம் ஆகியவை துடைத்து எறிய மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.