
ராணுவத் தளபதி நியமனத்தை காங்கிரஸ் கட்சி அரசியல் ஆக்கக்கூடாது. பாதுகாப்பு விஷயத்தில் அரசியல் கலக்கக் கூடாது. நடப்புசூழலுக்கு ஏற்றவாரே லெப்டினென்ட் ஜெனரல்பிபின் ராவத் நியமிக்கப்பட்டுள்ளார் என பாரதிய ஜனதா கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஸ்ரீகாந்த் சர்மா டெல்லியல்நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது-
தரைப்படைத் தளபதி தேர்வு என்பது 5 மூத்த அதிகாரிகளை தேர்வு செய்து அதில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அனைவருக்குள்ளும் கடுமையான போட்டி இருந்தது. ராவத் நியமனம் என்பது யாருக்கும் எதிரானது அல்ல. அதை மற்றவர்களுக்கு எதிரானதாக பார்க்கக் கூடாது.
தரைப்படைத் தளபதி ராவத் நியமனத்தை காங்கிரஸ் கட்சி அரசியல் ஆக்கி வருகிறது. தேசிய அரசியலில் அடுத்தடுத்து தொடர் தோல்விகளால் வெறுப்படைந்து காங்கிரஸ் இதுபோல் பேசி வருகிறது.
நாட்டில் இப்போது நிலவும் சூழ்நிலைக்கு ஏற்றார்போல் 5 அதிகாரிகளும் தேர்வு செய்யப்பட்டு, அதில் தகுதியானவராக ராவத் தேர்வு செய்யப்பட்டார். இந்த விஷயத்தில் யாரும் அரசியல் செய்யாதீர்கள் என அனைத்து கட்சிகளையும் கேட்கிறேன்.
எதிர்க்கட்சிகள் எந்த விஷயத்திலும் தீர ஆய்வு செய்யாமல், உடனடியாக முடிவுக்கு வந்துவிடக்கூடாது. கருத்துக்களைத் தெரிவிக்க சரியான நேரம் வரை பொறுத்து இருக்க வேண்டும். ஜனநாயக நெறிமுறைகளை ஒரு கட்சி அதிகமாக தூக்கி எறிந்து இருக்கிறது என்றால் அது காங்கிரஸ் கட்சிதான். ஆனால், பாரதிய ஜனதா கட்சி எப்போதும், ஜனநாயக விதிமுறைகளை பின்பற்றி நடக்கும் கட்சியாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.