கொரோனா தடுப்பில் இந்தியா சூப்பர்.. பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் பாராட்டு

By karthikeyan VFirst Published Apr 22, 2020, 10:06 PM IST
Highlights

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை இந்தியா சிறப்பாக மேற்கொண்டுவருவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
 

சீனாவின் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுதும் பேரழிவுகளை ஏற்படுத்திவருகிறது. உலகளவில் சுமார் 26 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் தான் பாதிப்பும் உயிரிழப்பும் அதிகம். அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்தை கடந்துவிட்டது. சுமார் 46 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலி மற்றும் ஸ்பெய்ன் ஆகிய நாடுகளிலும் பாதிப்பு மிகக்கடுமையாக உள்ளது. வல்லரசு நாடுகளே கொரோனாவை எதிர்கொள்ள திணறும் நிலையில், அந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் பாதிப்பு மிகமிகமிகக்குறைவு.

இந்தியாவில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும் 662 பேர் மட்டுமே இறந்துள்ளனர். 3500க்கும் அதிகமானோர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சையளித்து அவர்களை குணப்படுத்துவதுடன், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி, கண்காணித்து, பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள் தீவிரமாக நடந்துவருகின்றன. 

அதுமட்டுமல்லாமல் கொரோனா சமூக தொற்றாக மாறுவதை தடுத்து, தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட ஏதுவாக, பொருளாதார இழப்புகளை பற்றி கவலைப்படாமல் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. மேலும் நீட்டிக்கப்பட வேண்டிய அவசியம் உருவானால், நீட்டிக்கப்படவும் வாய்ப்புள்ளது. 

”my gov" என்ற மொபைல் ஆப்பின் மூலம் கொரோனா குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதுடன், கொரோனா வைரஸை டிராக் செய்யும் வகையிலான ஆரோக்கிய சேது என்ற மொபைல் ஆப்பையும் மத்திய அரசு உருவாக்கி, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறது. 

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளதாக பிரதமர் மோடிக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பாராட்டு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து பில்கேட்ஸ் எழுதிய கடிதத்தில், கொரோனாவுக்கு எதிராக உங்கள் அரசும்(இந்திய அரசு) நீங்களும்(பிரதமர் மோடி) எடுத்துவரும் முயற்சிக்கு எனது பாராட்டுக்கள். கொரோனாவுக்கு எதிராக டிஜிட்டல் பயன்பாடுகளை இந்தியா முழுமையாக பயன்படுத்துவது சிறப்பான விஷயம். அது மகிழ்ச்சியளிக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தடமறிந்து, கண்காணித்து, சுகாதார சேவைக்காக பிரத்யேகமாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆரோக்கிய சேது ஆப் சிறப்பானது.

ஊரடங்கை அமல்படுத்தி, விரிவான கொரோனா சோதனை, ஹாட்ஸ்பாட்டுகளை கண்டறிதல், பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி, மருத்துவ உதவிகள் செய்வது, சுகாதாரத்தை வலுப்படுத்துவதில் சிறப்பாக செயல்படுகிறீர்கள் என்று பாராட்டி கடிதம் எழுதியுள்ளார்.
 

click me!