
பெங்களூருவில் கார் மீது மோதிவிட்டு பைக்கை நிறுத்தாமல் சென்ற இளைஞரை பிடிக்க முயன்ற 71வயது முதியவரை, சாலையில் தரதரவென்று இழுத்துச் சென்ற இளைஞரின் செயல் வைரலாகியுள்ளது.
57 வினாடிகளே ஒடும் இந்த வீடியோவில் ஸ்கூட்டரின் பின்பக்கத்தை பிடித்து சாலையில் படுத்தவாரே வரும் முதியவரை, அந்த இளைஞர் தரதரவென சாலையில் இழுத்து வரும் காட்சி பதிவாகியுள்ளது. பெங்களூருவில் உள்ள மகாடி சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஜன.19 கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவிற்கு செல்கிறார் பிரதமர் மோடி… முழு பயண விவரம் இதோ!!
சாலையில் முதியவரை தரதரவென இழுத்துச் செல்லும் இளைஞரின் செயலைப் பார்த்த சாலையில் சென்ற மற்ற இரு சக்கர வாகன ஓட்டிகள், இளைஞரின் ஸ்கூட்டரை தடுத்து நிறுத்தினர். பொது மக்கள் கூட்டம் கூடியதைத் தொடர்ந்து என்ன செய்வதென்று தெரியாமல் அந்த இளைஞர் தனது வாகனத்தை நிறுத்தினார்.
இதையடுத்து, அந்த இளைஞர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தின் சாவியை எடுத்துக்கொண்ட மக்கள், போலீஸுக்கு தகவல் கொடுத்து, அந்த இளைஞரை ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து கோவிந்தராஜ நகர் காவல் நிலைய அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, அந்த இளைஞர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர்.
கோவிந்தராஜ நகர் போலீஸார் கூறுகையில் “ ஹெக்கனஹல்லியைச் சேர்ந்தவர் முத்தப்பா சிவயோகி தொண்டபூர். இவர் தனது ஜீப்பில் விஜயநகர் பகுதியில் நேற்று பிற்பகல் 2மணிக்கு வந்தார். அப்போது அப்பகுதியில் ஸ்கூட்டரில் வந்த இளைஞர் முத்தப்பா ஜீப் மீது மோதினார். இதில் ஜீப்பின் பின்பகுதி சேதமடைந்தது. இதைப் பார்த்த முத்தப்பா அந்த இளைஞரை நிறுத்துமாறு கூறி தடுத்துள்ளார்.
ஆனால் அந்த இளைஞர் தனது ஸ்கூட்டரை நிறுத்தாமல் தப்பிக்க முயன்றார், இளைஞரின் ஸ்கூட்டரின் பின்பகுதியை முத்தப்பா பிடித்து இழுத்து நிறுத்த முயன்றுள்ளார்.
மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் வைரல் வீடியோ! தெலங்கானா பாஜக மாநிலத் தலைவர் மகன் மீது வழக்குப்பதிவு
இளைஞர், வேகமாகச் செல்லவே முத்தப்பா சாலையில் விழுந்து, ஸ்கூட்டரில் தரதரவென சாலையில் இழுத்துவரப்பட்டார். முத்தப்பா சாலையில் இழுத்துவரப்படுவதைப் பார்த்தும் இளைஞர் வாகனத்தை நிறுத்தாமல் ஓட்டியுள்ளார். சாலையில் சென்ற மக்கள் இளைஞரின் ஸ்கூட்டரை மறித்து அவரை மடக்கி பிடித்தனர்.
இந்த சம்பவத்தில் முத்தப்பாவின் கை, கால், வயிற்றுப்பகுதியில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தோம். ஸ்கூட்டரை ஓட்டிய இளைஞர் பெயர் சாஹில்(25). சாஹில் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐபிசி பிரிவு 337, 338, 307 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இளைஞர் கைது செய்யப்பட்டார்” எனத் தெரிவித்தனர்
முத்தப்பா கூறுகையில் “செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டிவந்த இளைஞர் என்னுடைய வாகனத்தில் மோதியபோது அவரை நிறுத்துமாறு தடுத்தேன். அதற்கு அந்த இளைஞர் தமிராகப் பேசினார். என்னிடம் மன்னிப்புக் கேட்டிருந்தால் மன்னித்திருப்பேன்.
ஆனால், தமிராகப் பேசிவிட்டு வாகனத்தில் வேகமாகச் செல்ல முயன்றபோது, வாகனத்தை பிடித்து தடுத்தேன். அப்போது என்னையும் சேர்த்து இழுத்துக்கொண்டு சென்றார். சாலையில் நான் இழுத்துச் செல்லப்படும்போது வேகமாகச் செல்லாதே என்றே கேட்டுக்கொண்டபோதிலும் அந்த இளைஞர் வேகமாகச் சென்றார். 600 மீட்டர் வரை நான் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டேன். உதவி கோரி நான் அலறிய சத்தம் கேட்டு சாலையில் சென்ற மக்கள் என்னைக் காப்பாற்றினார்கள்” எனத் தெரிவித்தார்
பெங்களூரு மேற்கு காவல் துணை ஆணையர் லக்ஷ்மன் நி்ம்பார்கி கூறுகையில் “ சாஹில் மீது கோவிந்தராஜ் நகர் மற்றும் மகடி போக்குவரத்து காவல்பிரிவு ஆகியோர் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்தனர்.”எனத் தெரிவித்தார்