
வாக்கு எண்ணிக்கையில் ஏதேனும் முறைகேடுகள் நடந்தால், நேபாளம், பங்களாதேஷ், இலங்கை நாடுகளில் நடந்தது போன்ற கலவரங்கள் பீகாரில் வெடிக்கும் என்று ராஷ்டிரிய ஜனதா தளத்தின் (RJD) தலைவர் சுனில் சிங் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பீகார் தேர்தல் முடிவுகள் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படவுள்ள நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுனில் சிங், "பொதுமக்களின் தீர்ப்பை மாற்றியமைக்க வேண்டாம் என்று வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்டுள்ள அனைத்து அதிகாரிகளையும் நான் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் அவ்வாறு செய்தால், நேபாளம், பங்களாதேஷ், இலங்கையின் வீதிகளில் நீங்கள் கண்ட அதே காட்சிகள் பீகாரின் வீதிகளிலும் காணப்படும்," என்று அச்சுறுத்தும் தொனியில் கூறினார்.
"2020ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், எங்கள் வேட்பாளர்கள் பலர் பலவந்தமாக தோற்கடிக்கப்பட்டனர்," என்று குற்றம் சாட்டிய சுனில் சிங், "பொதுமக்கள் யாருக்குத் தீர்ப்பளித்தார்களோ, அவர்களை நீங்கள் தோற்கடித்தால், அது பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்," என்று எச்சரித்தார்.
ஆர்ஜேடி கட்சி விழிப்புடன் இருப்பதாகவும், மக்கள் உணர்வுகளுக்கு எதிராக செயல்பட வேண்டாம் என்றும் அதிகாரிகளை அவர் வலியுறுத்தினார்.
"நாங்கள் மிகவும் விழிப்புடன் இருக்கிறோம். மக்கள் ஏற்றுக்கொள்ளாத, மக்கள் உணர்வுக்கு எதிரான எதையும் நீங்கள் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்," என்று அவர் கூறினார்.
ஆர்ஜேடி தலைவர் சுனில் சிங், தங்கள் கட்சி 140 முதல் 160 இடங்களை வென்று தேஜஸ்வி யாதவ் தலைமையில் அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். வாக்கு எண்ணிக்கையில் எந்தவிதமான முறைகேடுகளையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
சுனில் சிங்கின் இந்த பேச்சு கிளர்ச்சியைத் ஏற்படுத்தும் கருத்து எனக் கூறி அவர் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (NDA) தெளிவான பெரும்பான்மை கிடைக்கும் எனக் கூறியுள்ளன. இதனை ஆர்ஜேடி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மறுக்கின்றன. இதனால் பீகாரில் அரசியல் சூழ்நிலை பதட்டமாக உள்ளது. எனினும், ஒரு கருத்துக் கணிப்பு கடும் போட்டி இருக்கும் எனக் கணித்துள்ளது.
ஆக்சிஸ் மை இந்தியா (Axis My India) நடத்திய கருத்துக் கணிப்பின்படி, ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 121 முதல் 140 இடங்கள் வரை கிடைக்கலாம். ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் இடம்பெற்றுள்ள மகா கூட்டணிக்கு (Mahagathbandhan) 98 முதல் 118 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது.
243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டமன்றத்தில் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மைக்கு 122 இடங்கள் தேவை.