
தென்மேற்கு டெல்லியின் மஹிபால்பூர் பகுதியில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர சத்தம், ஆரம்பத்தில் வெடிகுண்டு சத்தமாக இருக்குமோ என்ற பீதியை ஏற்படுத்தியது. ஆனால், இது ஒரு அரசுப் பேருந்தின் டயர் வெடித்ததால் ஏற்பட்ட சத்தம் என அதிகாரிகள் பின்னர் உறுதி செய்தனர்.
காலை 9.19 மணியளவில், மஹிபால்பூரில் உள்ள ஒரு ஹோட்டல் அருகே வெடிகுண்டு போன்ற பயங்கர சத்தம் கேட்டதாக டெல்லி தீயணைப்பு சேவைக்கு (DFS) அழைப்பு வந்தது. உடனடியாக மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்லப்பட்டன.
அதிகாரிகள் சம்பவ இடத்தை விரிவாக ஆய்வு செய்தபோதும், அசாதாரணமான எதுவும் கண்டறியப்படவில்லை.
தென்மேற்கு டெல்லியின் துணை காவல் ஆணையர் அமித் கோயல் இதுகுறித்து பேசுகையில், "அழைப்பு விடுத்த நபரைத் தொடர்பு கொண்டபோது, அவர் குருகிராம் நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகவும், அப்போது பயங்கர சத்தத்தைக் கேட்டதாகவும் தெரிவித்தார். நாங்கள் எல்லாவற்றையும் சரிபார்த்தோம், ஆனால் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை,” என்றார்.
அருகில் உள்ளவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், டௌலா குவான் நோக்கிச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தின் பின் டயர் வெடித்ததே இந்த சத்தத்திற்குக் காரணம் என அங்கிருந்த ஒரு பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த வெடிகுண்டு சம்பவத்தால் இந்தச் சத்தம் அப்பகுதி மக்களிடையே சிறிது நேரம் பீதியை ஏற்படுத்தியது. இப்போது நிலைமை சீராக உள்ளது. பயப்பட ஒன்றுமில்லை என பொதுமக்களுக்கு டெல்லி காவல்துறையினர் உறுதியளித்துள்ளனர்.