Agnipath Protest: அக்னிபத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு... பீகாரில் ரெயில் சேவைகள் ரத்து...!

By Kevin KaarkiFirst Published Jun 19, 2022, 7:19 AM IST
Highlights

Agnipath Protest: புது சலுகைகள், வாக்குறுதிகள் அளிக்கப்பட்டும் புது திட்டத்திற்கான எதிர்ப்பு மற்றும் போராட்டம் குறையவில்லை. மாறாக போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது.

பீகார் மாநிலத்தில் இன்று அதிகாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டு உள்ளன. அக்னிபத் திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராட்டம் மற்றும் வன்முறை சூழல் ஏற்பட்டு இருப்பதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

முன்னதாக ரெயில்வே நிலையம் மற்றும் ரெயில் ஒன்றுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டது. இது மட்டும் இன்றி காவல் துறை அதிகாரிகள் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே நடைபெற்ற கல்வீச்சு தாக்குதலில் பலர் காயமுற்றனர். அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலத்தில் பந்த் நடத்த  போராட்டக்காரர்கள் முயற்சி செய்தனர். 

ரெயில்கள் ரத்து:

இதன் காரணமாக நேற்று மட்டும் நாடு முழுக்க சுமார் 350 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. அக்னிபத் திட்டத்தில் ஏராள மாற்றங்கள், புது சலுகைகள், வாக்குறுதிகள் அளிக்கப்பட்டும் புது திட்டத்திற்கான எதிர்ப்பு மற்றும் போராட்டம் குறையவில்லை. மாறாக போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது.

நான்கு ஆண்டு கால பணி காலம் நிறைவு பெற்றதும், ஒவ்வொரு வேலைவாய்ப்பிலும் பத்து சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என உள்துறை மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சகம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதே போன்று மீன்வளத் துறை அமைச்சகமும் அக்னிவீரர்களை பணியில் அமர்த்துவதாக அறிவித்து இருக்கிறது.

போராட்டம் மற்றும் வன்முறை:

கடும் போராட்டம் காரணமாக உத்திர பிரதேச மாநிலத்தில் 250-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சுமார் 400-க்கும் அதிகமானோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இது மட்டும் இன்றி ரெயில்வே காவல் துறை சார்பில் சுமார் 150 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கேரளா மாநிலத்தின் திருவணந்தபுரம் மற்றும் கோழிக்கோடு பகுதிகளில் இளைஞர்கள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களின் போராட்டம் ராணுவ ஆள்சேர்ப்புக்கு உடனடி தேர்வு வைக்கும் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்றது. கர்நாடகா மாநிலத்தின் தார்வாட் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின் போது போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்கள் விரட்டி அடித்தனர்.

எதிர்கட்சிகள் சார்பிலும் இந்த திட்டத்திற்கு  எதிராக கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சோனியா காந்தி, அக்னிபத் திட்டம் எதிர்கால நோக்கமற்றது என விமர்சித்துள்ளார். மேலும் அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற காங்கிரஸ் கட்சி சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மூத்த ராணுவ அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அக்னிபத் திட்டம் குறித்து பலக் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது, மூத்த ராணுவ அதிகாரிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் கருத்து கேட்ட பின்னரே அறிவிக்கப்பட்டு இருக்கிறது. திட்டம் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளாமலேயே அரசியல் நோக்கங்களுக்காக போராட்டம் நடத்தப்படுகிறது என தெரிவித்தார். 

click me!