
நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல், கற்பழிப்பு ஆகியவற்றைத் தடுக்கவும், ஆபாச தளங்களை முடக்கவும் இந்து பனாராஸ்பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் தலைமையிலான குழு ‘ஹரஹரமகாதேவா’ என்ற ஆப்ஸை(செயலி) உருவாக்கியுள்ளனர்.
பனாராஸ் இந்து பல்கலையில் உள்ள மருத்துவப்பிரிவில் நரம்பியல் பிரிவு பேராசிரியராக இருப்பவர் தலைமையிலான குழுவினர் இந்த ஆப்ஸைவடிவமைத்துள்ளனர்.
இந்த ஆப்ஸை மொபைல் போனிலும், கம்ப்யூட்டரிலும் பதிவேற்றம் செய்துகொண்டால், ‘ஆபாச இணையதளங்களை’ பார்க்க முயற்சிக்கும் போது அதைத் தடுத்து, இந்து பஜனை பாடல்களையும், பக்தி பாடல்களையும் ஒலிக்கும். அது போன்ற செக்ஸ் தளங்களை தானாக முடக்கி, இந்த பாடல்களை இந்த ஆப்ஸ் ஒலிக்க வைக்கும்.
இந்த ஆப்ஸ் மொபைல் போனிலும், கம்ப்யூட்டரிலும் செயல்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பனாராஸ் பல்கலையின் பேராசரியர் டாக்டர் விஜயநாத் மிஸ்ராகூறுகையில், “ அடுத்த மாதத்தில் இருந்து இந்த ஆப்ஸில் வேறுமதத்தின் பாடல்களும் இடம் பெறும் வகையில் மாற்றி அமைக்க இருக்கிறோம். உதாரணமாக முஸ்லிம்கள் இந்த ஆப்ஸை பயன்படுத்தும் போது, ஆபாச தளங்களை பார்க்க முற்பட்டால் ‘அல்லாஹ் அக்பர்’ என்று ஒலிக்கும்.இதே போல மற்ற மதத்தினரின் பக்தி பாடல்களும் பதிவேற்றம் செய்யப்படும்.
முதலில் இந்த ஆப்ஸை என்னை சந்திக்க வரும் நோயாளிகள், எனது குழந்தைகள், மாணவர்களை அடிப்படையாக வைத்து தயாரித்தேன். ஆனால், இப்போது, இந்த ஆப்ஸ் உலகம் அனைத்துக்கும் கிடைக்க வேண்டும் என நினைக்கிறேன். இந்த ‘ஹரஹர மஹாதேவா’ ஆப்ஸ் தயாரிக்க எனக்கு 6 மாதங்கள் தேவைப்பட்டது. இதுவரை, 3,800 ஆபாச தளங்களை தடுத்து முடக்கியுள்ளது’’ எனத் தெரிவித்தார்.
இந்த ஆப்ஸை நரம்பியல் பேராசிரியர் மிஸ்ரா, ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்களும் இணைந்து தயாரித்துள்ளனர்.