பெங்களூரு பள்ளிகள் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்
கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் உள்ள 15 பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. கர்நாடகாவின் துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் வீட்டுக்கு எதிரே உள்ள பள்ளி உள்பட 15 பள்ளிகளுக்கு, மர்ம மின்னஞ்சல் முகவரிகளில் இருந்து விடுக்கப்பட்ட இந்த மிரட்டலால் பெரும் அச்சம் ஏற்பட்டது. உடனடியாக, மிரட்டலுக்கு உள்ளான பள்ளிகளில் இருந்து மாணவர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
இதுகுறித்து பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந் கூறுகையில், “இந்த துயரமான சம்பவங்கள் குறித்து எங்களுக்கு புகார் வந்துள்ளது. உடனடியாக, புகார் தெரிவித்த அனைத்து பள்ளிகளுக்கும் நகரின் வெடிகுண்டு செயலிழப்புப் படை அனுப்பி வைக்கப்பட்டது.” என்றார்.
இந்த நிலையில், பெங்களூரு பள்ளிகள் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தியே. குழந்தைகளின் பெற்றோர்கள் கவலைப்படத் தேவையில்லை. சில மணி நேரங்களில் சைபர் கிரைம் துறை மிரட்டல் விடுத்தவர்களை கண்டுபிடித்து விடுவார்கள். பெற்றோர்கள் பீதியடைய வேண்டாம். உங்கள் குழந்தைகளை பாதுகாக்க நாங்கள் இருக்கிறோம்.” என்றார்.
ராஜஸ்தான் எக்ஸிட் போல்: நம்பும் காங்கிரஸ், நம்பாத பாஜக!
முன்னதாக, கடந்த ஆண்டில் 30 பள்ளிகளுக்கு தினமும் இதே போன்ற மின்னஞ்சல்கள் வந்த நிலையில், பெங்களூரு நகரில் உள்ள சுமார் 15 பள்ளிகளுக்கு இன்று மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் நிலைமையில் தீவிரத்தை அதிகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கர்நாடகா உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா கூறுகையில், “தற்சமயம் வரை 15 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டும் இதே போல் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. பள்ளிகளில் சோதனைகள் நடத்தப்பட்டு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. மிரட்டல் விடுத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.