ராஜஸ்தான் எக்ஸிட் போல்: நம்பும் காங்கிரஸ், நம்பாத பாஜக!

By Manikanda Prabu  |  First Published Dec 1, 2023, 1:17 PM IST

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியமைக்கும் என அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்


மொத்தம் 200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் 25ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று  முடிந்தது. இதில் பதிவான வாக்குகள் வருகிற 3ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

ராஜஸ்தான் மாநிலத்தில் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று அசோக் கெலாட் முதல்வராக பொறுப்பேற்றார். அம்மாநிலத்தில் 1998ஆம் ஆண்டு முதல் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மாறி மாறி வெற்றி பெற்றுள்ளன. ஒரே கட்சி இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற வரலாறு அம்மாநிலத்தில் கிடையாது. ஆனால், இந்த முறை வரலாற்றை மாற்றி காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் என அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

Tap to resize

Latest Videos

இந்த நிலையில், நேற்றைய தினம் வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள், ஆளும் காங்கிரஸ் புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது. சில கருத்துக்கணிப்புகள் அம்மாநிலத்தில் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெறும் என கணித்துள்ளது. இருப்பினும், சில கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாக உள்ளன. எனவே, அம்மாநிலத்தில் கடும் போட்டி நிலவும் என தெரிகிறது.

அசோக் கெலாட் அரசின் சமூக நலத் திட்டங்கள் மற்றும் ஏழு உத்தரவாதங்களுக்கு மக்கள் வாக்களித்ததாக காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர். அதேசமயம், ஏழைகள், பட்டியல் சமூகம், சிறுபான்மையினர் அதிக அளவில் வாக்களித்துள்ளதாக கட்சியின் தேர்தல் உத்தியாளர்கள் கூறுகின்றனர். பணவீக்க நிவாரண முகாம்கள், சிரஞ்சீவி யோஜனா போன்ற பல திட்டங்கள் காங்கிரஸுக்கு ஆதரவாக இருந்ததை, பெண்களின் அதிக வாக்கு சதவீதம் சுட்டிக்காட்டுகிறது.

ஆளுநர் தீர்வு காணாவிட்டால் நாங்கள் தீர்வு காண நேரிடும்: உச்ச நீதிமன்றம்!

ஆனால், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் நம்பிக்கை இல்லை என்றும், பாஜக பெரும்பான்மை பெற்று வெற்றி பெறும் என பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர். மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நாங்கள் ஆட்சியமைப்போம் என மாநில பாஜக தலைவர் சிபி ஜோஷி கூறியுள்ளார்.

அதேசமயம், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் என்ன சொன்னாலும், ராஜஸ்தானில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கிறது என முதல்வர் அசோக் கெலாட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், 5 மாநிலங்களில் எதிலும் பாஜக வெற்றி பெறாத என தெரிவித்த அவர், ராஜஸ்தானில் காங்கிரஸின் வெற்றிக்கு மூன்று காரணங்களை குறிப்பிட்டார். “முதலாவதாக, ஆட்சிக்கு எதிரான மனநிலை இல்லை; இரண்டாவதாக, முதல்வர் தன்னால் முடிந்ததைச் செய்துள்ளார் என்று அனைவரும் நம்புகிறார்கள்; மூன்றாவது காரணம், பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் பிற அமைச்சர்கள் பேசுவது, நடந்து கொள்வது யாருக்கும் பிடிக்கவில்லை.’ என அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

click me!