எதிர்க்கட்சிகளின் 2-வது கூட்டம் இன்றும் நாளையும் பெங்களூருவில் நடைபெற உள்ளது.
2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கில் எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் இணைந்தால் மட்டுமே பாஜகவை எதிர்க்க முடியும் என்று கருதி நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஈடுபட்டார். இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிளின் கூட்டத்தை நிதிஷ்குமார் நடத்தினார்.
பாட்னாவில் முதல் எதிர்க்கட்சி கூட்டம்
பீகார் முதலமைச்சர் ஏற்பாடு செய்த இந்த கூட்டத்தில் 15 கட்சிகள் பங்கேற்றன. மேலும் வரும் மக்களவை தேர்தலில் இணைந்து போட்டியிட அனைத்து கட்சிகளும் ஒப்புக்கொண்டன. இந்த கூட்டத்தில் என்சிபி தலைவர் சரத் பவார், வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் 2-வது கூட்டம் இன்றும் நாளையும் பெங்களூருவில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் 2024 லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் வியூகத்தை எதிர்க்கட்சிகள் வகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் மொத்தம் 24 கட்சிகள் பங்கேற்க உள்ளன.
என்சிபி தலைவர் சரத் பவார் கலந்துகொள்ளவில்லை
மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத் பவார் இந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டார் என்று தகவல் வெளியானது. ஆனால் சரத்பவார் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. எதிர்க்கட்சிகள் கூட்டம் இன்றும் நாளையும் நடைபெற உள்ள நிலையில், அவர் இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. எனினும் நாளை நடைபெற உள்ள கூட்டத்தில் தனது மகள் சுப்ரியா சுலே உடன் கலந்து கொள்வார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே பாஜக தலைவர் பசவராஜ் பொம்மை, எதிர்க்கட்சிகள் இதுபோன்று எத்தனை கூட்டங்கள் நடந்தாலும் அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியையும் பாஜகவையும் தோற்கடிப்பதே எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதற்கு ஒரே காரணம் என்று பொம்மை கூறினார். கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு நாட்டின் விரைவான பொருளாதார மீட்சிக்கு பிரதமர் மோடி காரணம் என்று அவர் கூறினார், இது பிரதமருக்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற வழிவகுத்தது என்றும் அவர் தெரிவித்தார்.
சோனியா காந்தி கலந்து கொள்கிறார்
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி இன்று இரவு உணவுக் கூட்டத்தில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இரண்டாவது நாளில் நடைபெறும் மிக முறையான கூட்டத்தில் விரிவான வியூகத் திட்டங்களுடன் அவர் கலந்துகொள்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எந்தெந்த கட்சிகள் பங்கேற்கின்றன?
ஆம் ஆத்மி, சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே, ஆதித்யா தாக்கரே மற்றும் எம்பி சஞ்சய் ராவத் ஆகியோரும் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள். பெங்களூரில் நடைபெறும் கூட்டத்தில் ராகுல் காந்தியும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ் இந்த கூட்டத்தில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளார். பீகார் முதல்வர் நிதிஷ்குமார், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர், எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க பெங்களூரு செல்லவுள்ளனர்.
பாட்னாவில் நடந்த முதல் கூட்டத்தில் பங்கேற்காத மற்ற 8 கட்சிகளும் பாஜகவுக்கு எதிரான விவாதத்தில் பங்கேற்கின்றன. மதிமுக, விசிக, கொங்கு தேச மக்கள் கட்சி (கேடிஎம்கே), புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி (ஆர்எஸ்பி), அகில இந்திய பார்வர்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்க உள்ளன.