IPL Betting : பெங்களூருவில் தர்ஷன் பாபு என்ற ஒரு பொறியாளர், கிரிக்கெட் போட்டிகளில் பந்தயம் கட்டுவதில் விருப்பமுள்ளவாராக இருந்துள்ளார். அவரது அந்த செயல், ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கையை கொடூரமாகியுள்ளது.
தர்ஷன் என்ற அந்த நபர் கடந்த 2021 முதல் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) விளையாட்டுகளில் பந்தயம் கட்டி விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. அவர் ஒரு பந்தயத்தில் தோல்வியுற்ற பிறகு அடுத்த முறை பந்தயம் வைக்க கடன் மேல் கடன் பெற்றுள்ளார். இந்நிலையில் கடந்த தொகை சுமார் 1 கோடி ரூபாயை கடந்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவரது 23 வயது மனைவி, கடன் கொடுத்தவர்களின் தொடர் தொல்லையால் மனமுடைந்த நிலையில், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. கடந்த மார்ச் 18ஆம் தேதி கர்நாடகாவின் சித்ரதுர்காவில் உள்ள தனது வீட்டில் ரஞ்சிதா தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். குடும்பத்தினரின் கூற்றுப்படி, தர்ஷன் 1 கோடிக்கு மேல் கடனை பெற்றுள்ளார்.
ஹோசதுர்காவில் உள்ள நீர்ப்பாசனத் துறையில் உதவிப் பொறியாளராகப் பணிபுரிந்த அவர், 2021 முதல் 2023 வரை ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இது தம்பதியரின் நிதிநிலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு அதிர்ஷ்டம் கைவிட்ட நிலையிலும், அவர் தொடர்ந்து பந்தயம் கட்டுவதற்காக 1.5 கோடிக்கு மேல் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது.
அவர் ஏற்கனவே சுமார் 1 கோடி அளவிலான கடனை திருப்பி கொடுத்துள்ள நிலையிலும் இன்னும் 84 லட்சத்திற்கு மேல் அவருக்கு கடன் நிலுவையில் இருப்பதாக போலீஸார் கூறுகின்றனர். ரஞ்சிதா கடந்த 2020ல் தர்ஷனை மணந்தார். தர்ஷன் பந்தயத்தில் ஈடுபட்டது பற்றிய உண்மையை 2021ல் தான் ரஞ்சிதா உணர்ந்தார் என்று அவரது தந்தை வெங்கடேஷ் தகவல் அளித்துள்ளார்.
போலீசாரிடம் அளித்த தகவலில், வெங்கடேஷ் என்பவர் கொடுத்த புகாரில், பணம் கொடுப்பவர்களின் தொடர் துன்புறுத்தலால் தனது மகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், இதனால் தான் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார். மேலும், பணம் கொடுத்ததாகக் கூறப்படும் 13 பேரின் பெயரையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.