மைசூரைச் சேர்ந்த 3டி ஓவியக் கலைஞர் நஞ்சுண்டசாமி கன்னட எழுத்துருக்களை ஓவியங்களாக வரைந்துள்ளார்.
கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள ஓவியக் கலைஞர் நஞ்சுண்டசாமி கன்னட எழுத்துகளை ஓவியங்களைப் போல வரைந்து மாற்றுத்திறனாளி மாணவர்களின் கல்விக்கு உதவி செய்திருக்கிறார்.
மைசூரில் உள்ள அகில இந்திய பேச்சு மற்றும் செவித்திறன் நிறுவனத்துடன் இணைந்து, மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கற்றுக்கொள்ள உதவும் விதமாக கன்னட எழுத்துகளை ஓவியமாக வரைந்துள்ளார். முதலில் அந்நிறுவன வளாகத்தில் சில கார்ட்டூன் படங்களை வரைய அழைக்கப்பட்டிருந்தார் நஞ்சுண்டசாமி.
அப்போது அந்நிறுவன இயக்குநர் இவரை அணுகி மாற்றுதிறன் கொண்ட குழந்தைகளுக்காக பிரத்யேகமான ஓவியங்களை வரையவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அப்படித்தான் 49 கன்னட எழுத்துகள் ஓவிய வடிவில் பிறந்துள்ளன. இவற்றை வரைந்த முடிக்க 10-15 நாட்கள் ஆகி இருக்கிறது.
இந்த எழுத்து ஓவியங்கள் ஒரே நேரத்தில் எலி, கடிகாரம், ஏணி, மரம் என பல்வேறு விலங்குகள், பறவைகள், பொருட்கள் போலவும் கன்னட எழுத்துகள் போலவும் தோற்றம் அளிக்கும். படத்தில் உள்ளது என்ன விலங்கு அல்லது பொருள் என்று அடையாளம் கண்டால் அந்த எழுத்தையும் குழந்தைகள் எளிதாக அடையாளம் கண்டுவிடலாம்.
“இந்த வகையான வேலை அதிக நேரம் எடுக்காது, ஆனால் இது ஒரு வழக்கமான பணி அல்ல என்பதால், நிறைய முன்யோசனை தேவைப்பட்டது. எழுத்துக்களுடன் நன்றாகப் பொருந்தக்கூடிய வார்த்தையை நான் முதலில் கண்டுபிடிக்க வேண்டும். அதை சுவரில் வரைவதற்கு முன்பு ஒரு காகிதத்தில் வரைந்து பார்ப்பேன்” என்று விளக்குகிறார் நஞ்சுண்டசாமி.
எழுத்துகளை ஓவியங்களாக வரைவதில் முக்கியமான சவால் ஒன்றும் இருந்தது. எழுத்துகளை கற்றுக்கொள்ள பயன்படும் நோக்கில் உருவாக்கப்படுவதால் அந்தந்த எழுத்துகள் தெளிவாகத் தெரியும் அளவுக்கு கலை அம்சத்தைக் கட்டுப்படுத்தி வரையவேண்டும்
அவர் சிறுவயதில் கற்றுக்கொண்ட வார்த்தைகளை நினைவுகூர்ந்து ஓவியங்களுக்கு பயன்படுத்தியாகச் சொல்கிறார். திறக்கப்பட்ட நோட்டுப்புத்தகத்தை வரைந்து அதில் அச்சான எழுத்துகள் போல தன எழுத்து ஓவியங்களை வரைந்துள்ளார். இது குழந்தைகளுக்கு ஒரு பெரிய புத்தகத்தை வாசிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் எனவும் அவர் நஞ்சுண்டசாமி கூறுகிறார்.
சாலையில் உள்ள பள்ளங்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர் நெருக்கடி, முகமூடி அணிவதன் முக்கியத்துவம் போன்ற பிரச்சினைகளுக்காக குரல் எழுப்ப தனது ஓவியத்தை பயன்படுத்தினார் நஞ்சுண்டசாமி.
இந்த திட்டத்திற்கு ஆசிரியர்கள் உத்வேகம் அளித்த உத்வேகம்தான் காரணம் என்று கூறும் அவர், "கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்றபோது, குழந்தைகளுக்கு, குறிப்பாக மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்குக் கற்பிப்பது ஆசிரியர்களுக்குப் பெரிய சவாலாக இருந்தது. அவர்கள் கற்பிப்பதற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அவர்களுக்காக உதவ ஏதாவது செய்ய விரும்பி இதைச் செய்திருக்கிறேன்” என்கிறார்.
நஞ்சுண்டசாமி தனது எழுத்து ஓவியங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருக்கிறார். இதனால், அவரது கன்னட எழுத்து ஓவியங்கள் மைசூரில் இருந்தாலும், பெங்களூரிலும் அவற்றுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.