
பினாமி சொத்துக்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களுடன், அடுத்து வரும் காலங்களில் நடவடிக்ைக எடுக்கப்படும் என பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த ஆண்டின் கடைசி வானொலி நிகழ்ச்சியான மான் கி பாத்தில் பிரதமர் மோடி நேற்று மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது-
மக்களிடம் ஆலோசனை
ஊழல், கருப்பு பணம் ஆகியவற்றுக்கு எதிரான எனது அரசின் போர் அடுத்து வரும் காலங்களில் தொடரும். ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், அரசும், ரிசர்வ் வங்கியும் அடிக்கடி விதிமுறைகளை மாற்றுவதாக குறை கூறுகின்றனர்.
ஆனால், இந்த அரசு மக்களிடம் ரூபாய் நோட்டு அறிவிப்பு தொடர்பாக ஆலோசகனைகளைப் பெற்று அதற்கு ஏற்றார்போல்தான் அறிவிப்புகளை அரசு வெளியிடுகிறது.
ஆதரவு தேவை
ஊழலுக்கு எதிராக எனது அரசு மேற்கொண்டு இருக்கும் போருக்கு இந்த நாட்டு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். தவறு செய்பவர்கள், மக்களின் உதவியோடுதான் கண்டுபிடிக்கப்பட்டு, தண்டிக்க முடியும். அதற்கு சாமானிய மக்கள் முன்வந்து, கருப்புப்பண பதுக்கல்காரர்கள் குறித்தும், ஊழல்வாதிகள் குறித்தும் உறுதியான தகவல்களை அரசுக்கு அளிக்க வேண்டும்.
இதுதான் தொடக்கம்
நான் உங்களுக்கு ஒன்றை உறுதி கூறுகிறேன். ஊழல், கருப்புபணத்துக்கு எதிரான கடைசி போர், நடவடிக்கை இது இல்லை. இது தொடக்கம் தான். ஊழல், கருப்பு பணத்துக்கு எதிரான இந்த போரில் வெற்றி பெறும் வரை இந்த போர் தொடரும். இது நிறுத்தப்படுவதற்கோ அல்லது பின்வாங்குவதோ என்ற பேச்சுக்கே இடமில்லை.
நாடாளுமன்றம் விவாதம் இன்றி முடக்கப்பட்டதற்கு குடியரசு தலைவரும், குடியரசு துணைத்தலைவரும் வேதனை தெரிவித்தனர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஆரோக்கியமான முறையில் விவாதம் நடத்தப்பட வேண்டும்.
வீண் வதந்தி
அரசியல் கட்சிகள் ஏராளமான சலுகைகளைப் பெற்று வருகிறார்கள், அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என சிலர் வீண் வதந்திகளை பரப்புகிறார்கள். அது தவறானது. சட்டத்தின் முன் அனைவரும் சமம். அனைவரும் சட்டத்துக்கு அடிபணிந்தவர்களே.
நாடாளுமன்றத்தில் கூட்டத் தொடர் நல்ல முறையில் நடந்து இருந்தால், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவது குறித்தவிசயத்தை விவாதித்து இருக்கலாம். ஆனால், ஒழுங்காக அவை நடந்ததா?.
மக்கள் ஆதரவு
கருப்பு பணத்துக்கு எதிரான போரில் மக்கள் அளித்து வரும் ஆதரவு வரவேற்கிறது. மக்களின் பேராதரவோடு தான், சமீப நாட்களாக தவறு செய்தவர்கள் பலர் அதிகாரிகளிடம் சிக்கி வருகிறார்கள். அவர்களின் கோடிக்கணக்கான பணம், நகைகள், சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இது அனைத்துமே மக்கள் கொடுத்த தகவல்கள் தான் முடிந்தது. இது போன்ற ரகசிய தகவல்களை மக்கள் mygovapp என்ற செயலியில் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
பினாமி சட்டம் பாயும்
கடந்த 1988ம் ஆண்டு முதல் பினாமி சொத்துக்களுக்கு எதிரான சட்டம் விதிமுறைகள் வகுக்கப்படாமல் கிடப்பில் இருந்தது. அது மீண்டும் எடுக்கப்பட்டு, வலிமையான சட்டவிதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அடுத்து வரும் நாட்களில் பினாமி சொத்துக்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டு நலன், மக்கள் நலன் ஆகியவற்றுக்கு என்ன தேவையோ அதுதான் எங்கள் முன்னுரிமையாக இருக்கும்.
வாழ்த்துக்கள்
குளிர்காலக் கூட்டத்தொடரில் மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் மசோதா நிறைவேற்றியதற்கு நான் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். மேலும், கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்கும், முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்தநாளுக்கு எனது வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.