
கர்நாடக மாநிலத்தில் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் நாளும் ஒரு பிரச்சனை வந்துக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் அங்கு வித்தியாசமான முறையில் நடந்துள்ள கோவில் திருவிழா, அனைத்து மக்களையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. பெங்களூரு-கர்நாடகாவில், பாரம்பரிய முறைப்படி 'குரான்' ஓதி, கோவில் தேர்த் திருவிழா தொடங்கியுள்ள சம்பவம் மத நல்லிணக்கத்திற்கு சான்றாக அமைந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கல்வி நிலையங்களில் முஸ்லீம் மாணவிகள் வகுப்புக்குள் ஹிஜாப் அணிந்து வருதற்கு அரசு தடை விதித்தது. மேலும் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை வகுப்புக்குள் அனுமதிக்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்த்து தெரிவித்து, மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனிடையே ஹிஜாப் எதிர்த்து தெரிவித்து, காவி துண்டு அணிந்து சில மாணவ, மாணவிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இது இந்து - முஸ்லிம் மத பிரச்சனையாக வெடித்தது.
ஹிஜாப் அனுமதி வழங்கக்கோரி முஸ்லிம் மாணவிகள் தரப்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்து வந்த கர்நாடக உயர் நீதிமன்றம், அரசு விதித்த தடை செல்லும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மாணவிகள் சிலர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். ஆனால் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஹிப்ஜாப் தொடர்பான பிரச்சனையை ஒருபுறம் ஓய, திருவிழாக்களின்போது, கோவிலுக்கு அருகில் கடைகள் வைக்க, முஸ்லிம்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஹிஜாப் அணிந்து வந்தால், தேர்வுப் பணி செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அம்மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கைகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
இந்நிலையில் இங்கு மத நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில் கோவிலில் தேர்த் திருவிழா ஒன்று நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள 12ம் நுாற்றாண்டை சேர்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற சென்னகேசவா கோவிலில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் கோவில் தேர்த் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது.
இக்கோவில் திருவிழாவின் போது தேர் புறப்படுவதற்கு முன்பாக, இஸ்லாமியர்களின் புனித நுாலான குரானில் இருந்து சில வாசகங்கள் ஓதப்படுவது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் நடந்த திருவிழாவில், தேர் புறப்படுவதற்கு முன், இஸ்லாமிய மத குருவான காஜி சையது சஜீத் பாஷா என்பவர், குரானில் இருந்த வாசகங்களை ஓதினார். மேலும், இதன் ஒரு நிகழ்வாக, கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு தர்காவுக்கு கரகமும் எடுத்துச் செல்லப்பட்டது
ஆனால் இந்த நிகழ்விற்கு சில இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, கோஷமிட்டனர். இந்த நடைமுறைகள், இந்து மதத்திற்கு எதிரானவை என்றும் இவற்றை இனி பின்பற்றக்கூடாது என்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனினும், கோவில் நிர்வாகிகளும், பக்தர்களும் அவற்றை பொருட்படுத்தாமல், பாரம்பரிய முறைப்படி, அனைத்து சடங்குகளையும் செய்தனர். இந்நிலையில் பாரம்பரிய முறைப்படி 'குரான்' ஓதி, கோவில் தேர்த் திருவிழா தொடங்கியுள்ள சம்பவம் மத நல்லிணக்கத்திற்கு சான்றாக அமைந்துள்ளது.