கர்நாடகா பஸ் டிக்கெட்டில் வெடித்த மொழிப் போர்! பெலகாவி எல்லையில் பதற்றம்!

Published : Feb 24, 2025, 07:13 PM IST
கர்நாடகா பஸ் டிக்கெட்டில் வெடித்த மொழிப் போர்! பெலகாவி எல்லையில் பதற்றம்!

சுருக்கம்

கர்நாடகாவில் பஸ் டிக்கெட் எடுப்பதில் ஏற்பட்ட வாக்குவாதம் மொழிப் பிரச்சினையாக வெடித்துள்ளது. பெலகாவி எல்லையில் கன்னடம், மராத்தி மொழிப் பிரச்சினை கைகலப்பாக மாறியதால் பதற்றம் நிலவுகிறது. பேருந்துப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பஸ் டிக்கெட் எடுப்பதில் ஏற்பட்ட வாக்குவாதம் மொழிப் பிரச்சினையாக வெடித்துள்ளது. அந்த மாநிலத்தில் மகாராஷ்டிர மாநில எல்லையில் உள்ள மாவட்டம் பெலகாவி. மகாராஷ்டிராவை ஒட்டிய மாவட்டமாக இருப்பதால் இங்கு மராத்தி பேசும் மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர்.

இதனால், பெலகாவி மாவட்டத்தை மகாராஷ்டிர மாநிலத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. ஆனால், கன்னடம் பேசும் பொதுமக்கள் பெலகாவியை மகாராஷ்டிராவுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இந்த விவகாரம் தொடர்பான வழக்குகூட நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

இச்சூழலில் பெலகாவி மாவட்ட எல்லையில் இயக்கப்படும் கர்நாடகா அரசுப் பேருந்தில் கன்னடம் - மராத்தி மொழிப் பிரச்சினை வெடித்துள்ளது. சிலர் அரசுப் பேருந்து ஓட்டுநரையும் நடத்துநரையும் மராத்தியில் பேசச் சொல்லி தாக்கியதாகக் கூறப்படுகிறது. பேருந்தில் ஏறிய சிலர் மராத்தி மொழியில் பேசி டிக்கெட் கேட்டுள்ளனர். நடத்துநர் மராத்தி மொழி தெரியாது என்று கூறி, கன்னடத்தில் பேசுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார்.

நடத்துநர் கூறியதைக் கேட்டு ஆத்திரம் அடைந்த பயணி, மராத்தி மொழி தெரியாவிட்டால், அந்த மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறியிருக்கிறார். கர்நாடகாவில் பெண்களுக்கு மட்டும் இலவசப் பேருந்துப் பயணம் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மராத்தியில் டிக்கெட் கேட்ட பயணி உடன் வந்த ஆணுக்கு சேர்த்து இலவச பயண டிக்கெட் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துரை மராத்தி பேசிய மூன்று பேர் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. மூன்று பேரில் ஒரு சிறுவனும் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அந்தச் சிறுவனை நடத்துநர் தகாத வார்த்தைகளைக் கூறித் திட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

இந்தச் சம்பவத்தின் எதிரொலியாக, பெங்களூருவில் மகாராஷ்டிரா பேருந்து ஒன்றில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது கறுப்பு மையைப் பூசி தாக்கப்பட்டுள்ளனர். கன்னட ரக்‌ஷன வேதிகே அமைப்பினர் இந்தத் தாக்குதல் ஈடுபட்டுள்ளனர். இதனால், பெலகாவியில் உள்ள இருமாநில எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இதனால், கர்நாடகா, மகாராஷ்டிரா இடையே பேருந்துப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் எல்லையில் நிலைமையை ஆய்வு செய்ய கர்நாடக ராமலிங்க் ரெட்டி பெலகாவிக்கு விரைந்துள்ளார். இதனிடையே மகாராஷ்டிரா அரசு பேருந்து ஊழியர்கள் தாக்கப்பட்டது குறித்து கர்நாடக அரசு விளக்கமளிக்க வேண்டும் என மகாராஷ்டிரா போக்குவரத்துத்துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!
IndiGo பயணிகளுக்கு ஷாக் கொடுத்த CEO.. இன்னும் 10 நாளைக்கு இது தான் கண்டிஷன்..!