போதைன்னாலும் ஓர் அளவு வேண்டாமா.? நேர்த்திக் கடனில் ஆடுக்குப் பதில் மனித தலையில் ஒரே வெட்டு.!

By Asianet TamilFirst Published Jan 17, 2022, 10:28 PM IST
Highlights

போதையில் இருந்த சலபதி எதிர்பாராதவிதமாக ஆட்டு தலையை வெட்டுவதற்குப் பதில் ஆட்டை பிடித்துக்கொண்டிருந்த சுரேஷ் தலையை ஓங்கி வெட்டினார். இதில் கழுத்து வெட்டுப்பட்டு படுகாயம் அடைந்த சுரேஷ் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
 

ஆந்திர மாநிலம் சித்தூரில் குடிபோதையில் இருந்தவர் நேர்த்திக்கடனில் ஆட்டு தலையை வெட்டுவதற்குப் பதில் அதைப் பிடித்துக்கொண்டிருந்த நபரின் தலையை வெட்டிய சம்பவம் அரங்கேறியிருக்கிறது. 

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் மதனப்பள்ளி அருகே வலசப்பள்ளி என்ற ஊர் உள்ளது. இந்த ஊரில் மகர சங்கராந்தி விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அந்த ஊரில் உள்ள எல்லாம்மாள் கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்துவது பிரசித்திப் பெற்றது. இந்தக் கோயிலில் நேர்த்திக்கடனைச் செலுத்த அருகில் உள்ள ஊர்களிலிருந்து மக்கள் திரண்டு வருவார்கள். ஆடு, கோழி அக்கோயிலில் தொடர்ச்சியாக நேர்த்திக்கடன் நிறைவேற்றப்படும். இதனையடுத்து பொங்கல் வைத்து படையல் வழிபாடும் செய்வார்கள். 

இந்த நேர்த்திக்கடனை செய்வதற்காக 35 வயது மதிக்கத்தக்க சுரேஷ் என்ற இளைஞர் ஆடு ஒன்றை கோயிலுக்கு எடுத்து வந்திருந்தார்.  ஆடு, கோழிகளை வெடும் நேர்த்திக்கடனை நிறைவேற்றும் பணியில் சலபதி என்பவர் ஈடுபட்டிருந்தார். நேற்று நள்ளிரவு வரை உயிரினங்களை பலி கொடுக்கும் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவில் சலபதி நன்றாக மது அருந்திவிட்டு முழு போதையில் நேர்த்திக்கடனை நிறைவேற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். சுரேஷ் தன்னுடைய ஆட்டை பலி கொடுக்க, அதை இழுத்து பிடித்துக்கொண்டிருந்தார். போதையில் இருந்த சலபதி எதிர்பாராதவிதமாக ஆட்டு தலையை வெட்டுவதற்குப் பதில் ஆட்டை பிடித்துக்கொண்டிருந்த சுரேஷ் தலையை ஓங்கி வெட்டினார். இதில் கழுத்து வெட்டுப்பட்டு படுகாயம் அடைந்த சுரேஷ் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

அங்கிருந்தவர்கள் சுரேசை மதனப்பள்ளியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகத் தூக்கி சென்றனர். ஆனால், சிறுது நேரத்தில் சுரேஷ் உயிரிழந்தார்.  நேர்த்திக்கடன் கொடுக்க வந்து உயிரிழந்த சுரேசுக்கு மனைவியும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இச்சம்பவம்  தொடர்பாக மதனப்பள்ளி போலீஸார் வழக்குப்பதிவு செய்து சலபதியைக் கைது செய்தனர். இச்சம்பவம் சம்பவம் தவறுதலாக நடந்ததா அல்லது உள்நோக்கத்தோடு நடந்ததா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். 

click me!