கொரோனா பரவுதலில் முதலிடத்தில் புதுச்சேரி..அசூர வேகத்தில் எகிறும் பாதிப்பு..புதிய கட்டுபாடுகளை விதித்த அரசு..

By Thanalakshmi VFirst Published Jan 17, 2022, 9:02 PM IST
Highlights

புதுச்சேரியில் கொரோனா அதிகரித்து வருவதால் அரசு அலுவலகங்களில் 50% ஊழியர்கள் பணிக்கு வந்தால் போதும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

கொரோனாவால் புதுச்சேரி அரசு அலுவலகங்களில் 50% ஊழியர்கள் பணிக்கு வந்தால் போதும் என்று அரசுத் துறைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.கொரோனா பரவும் சதவீதம் மற்ற மாநிலங்களைவிட புதுச்சேரியில் அதிகரித்து வருவதால் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன.

புதுச்சேரியில் அனைத்து அலுவலகங்களில் பணிபுரியும் குரூப் ஏ அதிகாரிகள் அனைவரும் பணிக்கு வரவேண்டும். அதே போல் சார்பு செயலர்கள், துறை தலைவர்கள், துறை நிர்வாகிகள் அனைவரும் முழு அளவில் பணிக்கு வர வேண்டும். குரூப் பி மற்றும் குரூப் சி பிரிவு அதிகாரிகள் 50 சதவீதம் பேர் பணிக்கு வந்தால் போதுமானதாகும். அதாவது முழு எண்ணிக்கையில் 50% பணியாளர்கள் அந்த அலுவலகத்தில் பணிக்கு வரலாம். அதேபோல் கர்ப்பிணிகள், உடல்குறைபாடு உடையோர் ஆகியோர் அலுவலகம் வருவதிலிருந்து விலக்கு தரப்பட்டு வீட்டிலிருந்து பணியாற்றலாம்.

அதே நேரத்தில் அத்தியாவசியத் துறைகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது. மேலும் வருவாய் தொடர்பான துறைகள், கொரோனா தொடர்பான பணிகளில் உள்ள துறைகளுக்கும் இவ்வுத்தரவு இல்லை. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருப்போர் அலுவலகம் வருவதில் விலக்கு தரலாம். வீட்டிலிருந்து பணியாற்றுவோர் பணி நேரத்தில் தொடர்பு கொள்ளும் வகையில் தகவல் தொடர்பு சாதனங்கள் வசதியை உறுதிப்படுத்த வேண்டும். அலுவலக கூட்டங்களை வீடியோ கான்பரசிங் முறையில் நடத்தலாம். பார்வையாளர்களைத் தவிர்க்கலாம்.

 அலுவலகத்தில் கொரோனா விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். அலுவலகங்களில் பணியாற்றுவோர் நூறு சதவீதம் தடுப்பூசி போட்டதைத் துறை தலைவர்கள் உறுதிப்படுத்த வேண்டும். பணியிடங்கள் தூய்மையாக இருப்பதையும், அலுவலக வளாகங்கள் மற்றும் கேன்டீனில் கூட்டம் கூடுவதையும் தவிர்ப்பதை உறுதிப்படுத்த வேண்டும். வரும் ஜனவரி 31-ம் தேதி வரை இம்முறை நடைமுறையில் இருக்கும் என  சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!