
பாலிவுட் நடிகரும், பாஜக எம்.பி.யுமான சன்னி தியோலுக்கு சொந்தமாக மும்பை ஜூஹுவில் வீடு உள்ளது. இந்த வீட்டுக்கான கடனை அவர் திருப்பிச் செலுத்தவில்லை என தெரிகிறது. இதையடுத்து, ரூ.56 கோடி நிலுவைத் தொகையை வசூலிக்க அவரது வீட்டை ஏலம் விடுவதற்காக பொது அறிவிப்பை அரசுக்கு சொந்தமான வங்கியான பேங்க் ஆஃப் பரோடா வெளியிட்டது.
அதில், வருகிற செப்டம்பர் மாதம் 25ஆம் தேதியன்று சன்னி தியோலின் வீடு ஆன்லைன் மூலம் ஏலத்தில் விடப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், சன்னி தியோலின் வீடு ஏலம் தொடர்பான அறிவிப்பை பேங்க் ஆஃப் பரோடா திரும்பப் பெற்றுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், ஆன்லைன் ஏலம் தொடர்பான அறிவிப்பு தொழில்நுட்ப காரணத்தால் திரும்பப் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் ஏலம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட பேங்க் ஆஃப் பரோடா, இன்றைய தினம் அதனை திரும்பப்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவின் அழுத்தம் காரணமாக அந்த அறிவிப்பு திரும்பப்பெறப்பட்டதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இதுகுறித்து, வங்கியை தொடர்பு கொண்டபோது, நோட்டீஸை திரும்பப் பெறுவதற்கான எந்த காரணத்தையும் வங்கி தெரிவிக்கவில்லை. பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் தொகுதியின் பாஜக எம்.பி.யான சன்னி தியோலின் கத்தர் 2 திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி, ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது ஏன் தெரியுமா? - நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி விளக்கம்
பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் வாங்கிய ரூ.55.99 கோடி கடனுக்கு 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் வட்டி, அபராதம் என எதையுமே அவர் செலுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பேங்க் ஆஃப் பரோடா, ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பின்படி, சன்னி தியோலின் சொத்தை இணைத்த வங்கி, ஏலத்திற்கான கையிருப்பு விலையை ரூ.51.43 கோடியாகவும், டெபாசிட் தொகையை ரூ.5.14 கோடியாகவும் நிர்ணயித்திருந்தது. ஏல அறிவிப்பின்படி, சன்னி தியோலின் தந்தையும், அரசியல்வாதியுமான தர்மேந்திரா, இந்த கடனுக்கு தனிப்பட்ட உத்தரவாதம் அளிப்பவராகவும் உள்ளார்.
சட்ட விதிகளின்படி, வங்கிக்கான கடன் நிலுவைத் தொகையை சன்னி தியோல் செலுத்தினால், இந்த ஏலத்தை தடுத்து நிறுத்த அவருக்கான வாய்ப்பு உள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. சன்னி தியோல், கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் தொகுதியில் இருந்து பாஜக எம்.பி.யாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.