பட்டுவாடா செய்ய வங்கியில் பணம் இல்லை... – தொடர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் வேதனை

First Published Nov 17, 2016, 7:30 PM IST
Highlights


பழைய ரூபாய் நோட்டுக்களுக்கு பதிலாக புதிய நோட்டுகளை மாற்றுவதற்கு வங்கியில் போதியளவு பணம் இல்லாமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் ஏமாற்றம் அடைந்து, திரும்பி செல்கின்றனர்.

நாட்டில் பெருகி வரும் கறுப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுக்களை ஒழிப்பதற்காக மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என கடந்த 8ம் தேதி இரவு அறிவித்தது. அதனைத்தொடர்ந்து பொது மக்கள் கையில் உள்ள செல்லாத பணத்தை கடந்த 10ம் தேதி முதல் மாற்றி வருகின்றனர்.

பணம் மாற்றுபவர்களுக்கு தலா 4500 ரூபாய் வீதம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பல ஏ.டி.எம்.களில் பணம் வைக்கப்படாததால் செயல்படாமல் மூடிக் கிடக்கிறது. ஒரு சில வங்கிகள் 100 ரூபாய் நோட்டுகளை வைத்தால் மிக குறைந்த நேரத்தில் தீர்ந்து விடுகிறது.

கடந்த ஒரு வாரமாக இந்த பணி நடந்ததே தவிர பொது மக்களுக்கு போதுமான அளவு பணம் போய் சேரவில்லை. காரணம், நாட்டில் 85 சதவீதம் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் உள்ளன. 15 சதவீதம் நோட்டுகள் தான் 100, 50, 20, 10 ரூபாய் நோட்டுகளாகும்.

எனவே 85 சதவீத பணத்துக்கு ஈடாக பணத்தை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 500 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியானதே தவிர, பொதுமக்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை.

மேலும், கறுப்பு பணம் வைத்திருக்கும் சிலர், சாமானிய மக்களிடம் பணத்தை கொடுத்து மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதனால் வங்கியில் பணம் பெற வரும் பொதுமக்களுக்கு கையில் மை வைக்கும் திட்டம் நேற்று முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இதன் விளைவாக மக்கள் ஒரு வங்கியில் பணம் பெற்றுக்கொண்டு மற்ற வங்கியில் சென்று பணம் பெற முடியாது. பட்டுவாடா செய்யப்படும் 2000 ரூபாய் நோட்டுகளுக்கும் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மத்திய ரிசர்வ் வங்கி போதுமான அளவு பணத்தை வங்கிகளுக்கு வழங்காமல் குறைத்து அனுப்புவதாக கூறப்படுகிறது. இதனால், நேற்று வங்கிகள் மதியம் வரை மட்டுமே பொது மக்களுக்கு பணம் பட்டுவாடா செய்தன. பிற்பகலுக்கு மேல் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே பணம் எடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதனால் ஏராளமான பொது மக்கள் வரிசையில் காத்திருந்தும் ஏமாற்றம் அடைந்தனர். மத்திய கூட்டுறவு வங்கியில் வழக்கமாக பொதுமக்களுக்கு பட்டுவாடா செய்யும் பணம் கூட நேற்று வழங்கவில்லை.

நகைக்கடன்வங்கிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நகைக்கடன் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. நகைக்கடன் வாங்கும்போது அரசு விதித்துள்ள நடைமுறைப்படி நாள் ஒன்றுக்கு 24 ஆயிரம் ரூபாய் மட்டுமே பெற முடியும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகைக்கடன், நகையை திருப்புதல் போன்ற எந்த பணியும் நடைபெறவில்லை.

click me!