
நடப்பு நிதியாண்டுக்கான 2-வது நிதிக்கொள்கை மறு ஆய்வுக் கூட்டத்தில் வங்கிக்கடனுக்காக வட்டி வீதம் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எந்தவிதமான மாற்றமும் செய்யாமல் ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்தது.
அதேசமயம் அரசு பத்திரங்களில் வங்கிகள் செய்யும் முதலீட்டு கிடைக்கும் வட்டியை 0.5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதால், இனி அதிகமான தொகையை வங்கிகள் மக்களுக்கு கடன் அளிக்க முடியும்.
நடப்பு 2017-18 நிதியாண்டுக்கான 2-வது நிதிக்கொள்கை மறு ஆய்வுக் கூட்டம் நேற்றுமும்பையில் நடந்தது. ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் தலைமையில், நிதிக்கொள்கை குழு அறிவிப்புகளை வௌியிட்டது. அதில், வங்கிக்கடனுக்கான வட்டி வீதத்தில் எந்தவிதமான மாற்றமும் செய்யாமல் தொடர்ந்து 6.25 சதவீதமாக நீடிக்கிறது.
அதேபோல, ரிவர்ஸ் ரெப்போ எனச் சொல்லப்படும் வங்கிகள் ரிசர்வ் வங்கியில் செய்யும் டெபாசிட்களுக்கான வட்டியும் 6 சதவீதமாக மாற்றமில்லாமல் நீடிக்கிறது. கடனுக்கான வட்டி வீதம் குறைக்கப்படும் என்று தொழில்துறையினர், நடுத்தரவர்க்கத்தினர் எதிர்பார்த்த நிலையில், ஏமாற்றமே மிஞ்சியது.
இது குறித்து ரிசர்வ் வங்கி வௌியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது-
நிதிக்கொள்கை குழுவின் 5-வது கூட்டம், நடப்பு நிதியாண்டின் 2-வது நிதிக்கொள்கை கூட்டம் நேற்று நடந்தது. இதில் கடனுக்கான வட்டிவீதம் 6.25 சதவீதமாகவும்,ரிவர்ஸ் ரெப்போ 6 சதவீதமாகவும் மாற்றமில்லாமல் நீடிக்கிறது.
நாட்டின் பணவீக்கம் 4 சதவீதத்துக்குள் வைத்திருக்க வேண்டிய சூழல், நாட்டின் வளர்ச்சியை ஊக்குவித்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இப்போதுள்ள சூழலில் நாட்டுக்கு தனியார் முதலீடுகள் அதிகமாக வர வேண்டும், வங்கிகள் நல்ல முதலீட்டுடன், உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கான தடைகள் நீக்கப்பட வேண்டும். இவற்றை கொண்டு வரும் நோக்கில், நிதிக்கொள்கை அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.
அதேசமயம், விவசாயிகளுக்கு பயிர்கடன்தள்ளுபடி செய்தால், அரசின் நிதித்துறை இலக்குகளை அடையமுடியாமல் போய்விடும். நாட்டில் பணவீக்கம் அதிகரிக்கும். நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக அதிகரிக்கும் என்று முன்பு கணிக்கப்பட்ட நிலையில், 7.3 சதவீதமாக குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்....
1. கடனுக்கான வட்டியில் மாற்றமில்லை 6.25 சதவீதம்
2. ரிவர்ஸ் ரெப்போ 6 சதவீதம்(மாற்றமில்லை)
3. எஸ்.எல்.ஆர். ரேட் 20சதவீதமாக குறைப்பு
4. பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக குறைப்பு
5.பணவீக்கம் 2 முதல் 3.5 சதவீதம்
6. 7-வது ஊதியக்குழு அமலால் நாட்டினஅ பணவீக்கம் அதிகரிக்கும்.
7. அடுத்த நிதிக்கொள்கை மறு ஆய்வு கூட்டம் ஆகஸ்ட் 1 மற்றும் 2-ந்தேதிநடத்தப்படும்.