
குடியரசு தலைவர் தேர்தல் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறும் எனவும் வாக்கு எண்ணிக்கை ஜூலை 20 ஆம் தேதி நடைபெறும் எனவும் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்துடன் நிறைவடைகிறது. இந்நிலையில் அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்பதில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.
இதுகுறித்து யாரை வேட்பாளராக அமைக்கலாம் என காங்கிரஸ் தரப்பில் குழு ஒன்றை அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி அமைத்துள்ளார்.
மேலும் பாஜக தரப்பில் ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்தவரும், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவரும், ஜார்க்கண்ட் மாநில ஆளுநருமான திரவுபதி மர்முவை குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக நிறுத்த பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனிடையே இன்று மாலை 5 மணிக்கு குடியரசு தலைவர் தேர்தல் குறித்த தேதி அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஜூலை 24 உடன் குடியரசு தலைவர் பிரணாப்முகர்ஜியின் பணி காலம் முடிவடைகிறது. அதனால் ஜூலை 24 ஆம் தேதிக்குள் குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.
பனிக்காலம் முடிவதற்கு 60 நாட்களுக்கு முன் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வேண்டும்.
அனைத்து மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களும் வாக்களிக்க வேண்டும். நாடு முழுவதும் 4,120 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
மாநில மக்கள் தொகை அடிப்படையில் எம்.எல்.ஏக்களின் வாக்கு மதிப்பிடப்படும்.
இந்த தேர்தலில் எம்.பிக்கள் அனைவரும் வாக்களிப்பார்கள்.
குடியரசு தலைவர் தேர்தலில் ரகசிய வாக்கெடுப்பு முறை கடைபிடிக்கப்படும்.
ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களை விருப்ப அடிப்படையில் தேர்வு செய்யலாம்.
வாக்குப்பதிவு நடைபெறும் இடத்தில் வேட்ப்பாளர்கள் சார்பில் ஒருவர் இருக்கலாம்.
குடியரசு தலைவருக்கான வேட்பு மனுதாக்கல் ஜூன் 14 முதல் செய்யலாம்.
ஜூன் 28 வேட்புமனுதாக்கல் செய்ய கடைசி நாள்.
ஜூலை 17 ஆம் தேதி குடியரசு தலைவர் தேர்தல் நடைபெறும்.
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குபதிவு நடைபெறும்.
ஜூலை 20 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.