
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் முதல்வரை, மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர் ஆட்டிப்படைப்பது நியாயம் இல்லை என்ற கருத்து ஏற்புடையதுதான்.
ஆனாலும், புதுவை மாநில முதல்வர் நாரணசாமிக்கு, அது பொருந்தாது என்கின்றனர் அம்மாநில மக்கள். மேலும், முன்னாள் முதல்வர் ரெங்கசாமிக்கு, கொடுத்த இடையூறை, கிரண்பேடி மூலமாக அவர் அறுவடை செய்கிறார் என்றும் கூறுகின்றனர்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கும், அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கும் இடையே நிலவி வரும் மோதல் நாளுக்குநாள் முற்றி வருகிறது.
துணை நிலை ஆளுனரை மிரட்டும் வகையில், முதல்வர் நாராயணசாமி பேசிவருவதாக, அம்மாநில பாஜக நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
தமது அனுமதி இல்லாமல் அமைச்சர்கள் யாரும் துணை நிலை ஆளுநரை சந்திக்கக் கூடாது, எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதிகளில் துணை நிலை ஆளுனரை அனுமதிக்கக் கூடாது என்றும் முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், ஆளுநருக்கு எதிராக, இப்போது துடியாய் துடிக்கும் நாராயணசாமி, மத்திய அமைச்சராக இருந்தபோது ஆடிய ஆட்டத்தையும் கொஞ்சம் நினைத்து பார்க்க வேண்டும் என்கின்றனர் புதுவை மாநில மக்கள்.
ரங்கசாமி முதல்வராக இருந்தபோது, மத்திய அமைச்சராக இருந்த நாராயணசாமி, ஆளுநர் வீரேந்திர கட்டாரியா மூலம், முதல்வர் ரங்கசாமியை செயல்படவிடாமல் முழுமையாக முடக்கினார்.
ரங்கசாமியின் ஆதரவாளர்கள் பலர் சட்டம் ஒழுங்குக்கு சவாலாக இருக்கிறார்கள் என்று கூறி, முதல்வரை கேட்காமல் புதுச்சேரி காவல்துறை தலைவரையே மாற்றினார் ஆளுநர்.
அப்போது, புதுச்சேரியை பொறுத்தவரை அதிகாரங்கள் எல்லாம் ஆளுநருக்கே உள்ளது என்று பேட்டி கொடுத்தவர்தான் இந்த நாராயணசாமி. ஆனால், அவர் முதல்வரான பிறகு அப்படியே மாற்றி பேசுகிறார்.
அவர் மத்திய அமைச்சராக இருந்தபோது, ரங்கசாமி புதுச்சேரி முதல்வராக இருந்தார் என்பதற்காக, மத்திய அரசில் இருந்து வரவேண்டிய நிதியை கூட தடுத்தார்.
மேலும், புதுச்சேரி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான தனி மாநில அந்தஸ்து பற்றி ஒரு வார்த்தை கூட பிரதமரிடம் பேசவில்லை.
அத்துடன், தேர்தலில் தம்மை முதலமைச்சராக முன்னிறுத்தினால், காங்கிரஸ் கட்சி தோற்றுவிடும் என்று, நமச்சிவாயத்தை முன்னிறுத்தி, பின்னர் தமக்குள்ள மேலிட செல்வாக்கை பயன்படுத்தி கொல்லைப்புறமாக முதல்வர் பதவிக்கு வந்தவர் நாராயணசாமி.
ஆகவே, வினையை விதைத்த நாராயணசாமி, இன்று அதை அறுவடை செய்து கொண்டிருக்கிறார் என்கின்றனர் புதுச்சேரி மக்கள்.