
வங்கதேசத்தை சேர்ந்த 22 வயதான பெண் ஒருவர் தனது இந்திய காதலனை திருமணம் செய்ய சட்டவிரோதமாக எல்லையை கடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுக்குறித்து இந்தியா டுடே வெளியிட்ட தகவலின் படி, வங்கதேசத்தை சேர்ந்த 22 வயதான பெண் கிருஷ்ணா மண்டல். இவர் இந்தியாவை சேர்ந்த அபிக் மண்டல் என்பவருடன் பேஸ்புக்கில் பேசி பழகி வந்துள்ளார். இது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. அவர்கள் பேஸ்புக்கில் காதலித்து வந்த நிலையில் தனது காதலனை திருமணம் செய்துக்கொள்ள நினைத்த கிருஷ்ணா மண்டல், இந்தியா வர முடிவு செய்தார். ஆனால் அவரிடம் பாஸ்போர்ட் இல்லாததால் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைய திட்டமிட்டார். அதற்காக கிருஷ்ணா மண்டல் ராயல் பெங்கால் புலிகளுக்கு பெயர் பெற்ற சுந்தரவனப் காட்டுக்குள் நுழைந்தார். அந்த காட்டை துணிச்சலாக கடந்து பின்னர் ஆற்றில் சுமார் ஒரு மணி நேரம் நீந்தி இந்தியா வந்தடைந்தார்.
இந்தியா வந்த அவர், கொல்கத்தாவில் உள்ள காளிகாட் கோவிலில் தனது காதலனான அபிக் மண்டல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்ததாக கிருஷ்ணா மண்டல் கைது செய்யப்பட்டார். இதுக்குறித்து காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், கிருஷ்ணா முதன்முதலில் ராயல் பெங்கால் புலிகளுக்கு பெயர் பெற்ற சுந்தரவனப் காட்டுக்குள் நுழைந்தார். பின்னர் ஆற்றில் சுமார் ஒரு மணி நேரம் நீந்தி தனது இலக்கை அடைந்தார். மூன்று நாட்களுக்கு முன்பு, கொல்கத்தாவில் உள்ள காளிகாட் கோவிலில் கிருஷ்ணா அபிக் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இருப்பினும், சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்ததற்காக அவர் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார் என்று தெரிவித்தனர். இதனிடையே கைது செய்யப்பட்ட கிருஷ்ணா மண்டல் பங்களாதேஷ் உயரதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல் இந்த ஆண்டின் தொடக்கத்தில், வங்கதேசத்தை சேர்ந்த எமன் ஹொசைன் என்பவர் இந்தியாவில் உள்ள தனக்கு பிடித்த சாக்லேட் வாங்குவதற்காக ஒரு சிறிய ஆற்றின் குறுக்கே நீந்தி, வேலியின் இடைவெளி வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தார். அதை அடுத்து அந்த வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். இந்த நிலையில் மீண்டும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.