மோடியின் பதவியேற்பு விழா நாளை மறுநாள் (ஜூன் 8) நடைபெற உள்ளது. இந்த விழாவிற்காக அழைக்கப்படும் வெளிநாட்டு தலைவர்களில் வங்கதேசம், இலங்கை, பூடான், நேபாளம் மற்றும் மொரீஷியஸ் ஆகிய நாடுகளின் உயர்மட்ட தலைவர்களும் இடம்பெறலாம் என தகவல்கள் கூறுகின்றன.
நரேந்திர மோடி சனிக்கிழமை பிரதமராகப் பதவியேற்க உள்ள நிலையில், இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட பல அண்டை நாடுகளின் தலைவர்கள் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள அழைக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) 293 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருந்தாலும் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக இருக்கிறார்.
மோடியின் பதவியேற்பு விழா நாளை மறுநாள் (ஜூன் 8) நடைபெற உள்ளது. இந்த விழாவிற்காக அழைக்கப்படும் வெளிநாட்டு தலைவர்களில் வங்கதேசம், இலங்கை, பூடான், நேபாளம் மற்றும் மொரீஷியஸ் ஆகிய நாடுகளின் உயர்மட்ட தலைவர்களும் இடம்பெறலாம் என தகவல்கள் கூறுகின்றன.
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு மோடி அழைப்பு விடுத்ததாக அந்நாட்டு அதிபர் அலுவலகத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மோடியின் அழைப்பை விக்ரமசிங்கே ஏற்றுக்கொண்டதாவும் தெரிவித்துள்ளது. முன்னதாக, தேர்தலில் என்.டி.ஏ. கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து, விக்ரமசிங்கே மோடியை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுடனும் மோடி தொலைபேசியில் உரையாடி இருக்கிறார். அப்போது தனது பதவியேற்பு விழாவில் பங்கேற்க ஹசீனாவை மோடி அழைத்தார் என்றும் ஹசீனா அதை ஏற்றுக்கொண்டார் என்றும் அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
இதேபோல, நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் பிரசந்தா, பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கே, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகியோரும் மோடியின் பதவியேற்பு விழாவுக்கு அழைக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இவர்களுடன் மோடி தனிப்பட்ட முறையில் போனில் பேசிவிட்டதாகவும், வியாழக்கிழமை அனைவருக்கும் முறையான அழைப்பிதழ் அனுப்பப்படும் என்றும் கூறப்படுகிறது.
2019ஆம் ஆண்டு மோடி பிரதமாகப் பதவியேற்றபோது தெற்காசிய நாடுகளின் பிம்ஸ்டெக் கூட்டமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.