“வண்டி டேங்கை நீங்க நிரப்புங்க”… “உங்க வயிறை நாங்க பார்த்துக்கிறோம்”....பெட்ரோல் போட வருபவர்களுக்கு இலவச உணவு

Asianet News Tamil  
Published : Sep 10, 2017, 08:51 PM ISTUpdated : Sep 19, 2018, 01:10 AM IST
“வண்டி டேங்கை நீங்க நிரப்புங்க”… “உங்க வயிறை நாங்க பார்த்துக்கிறோம்”....பெட்ரோல் போட வருபவர்களுக்கு இலவச உணவு

சுருக்கம்

bangalore road side petrol bunk

பெங்களூரில் வாழும் மக்களுக்கு 2-வது வீடு, எது என்றால் அது பெரும்பாலும் சாலையாகவே இருக்கும். ஏனென்றால், வீடு, அலுவலகம் தவிர அதிகநேரம் போக்குவரத்து நெரிசலில்தான் அவர்கள் சிக்கித் தவிக்கிறார்கள்.

இதனால், பெரும்பாலும் இளைஞர்கள் முதல் திருமணமானவர்கள் வேலைக்கு சரியான நேரத்துக்கு செல்ல வேண்டி, காலை, மதிய உணவு சாப்பிடுவதில்லை. அவர்கள் தவிர்த்து விடுகிறார்கள் என்பதைக் காட்டிலும் சாப்பிடமுடியாமல் வந்து விடுகிறார்கள்.

அவர்களுக்காக பெங்களூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க், தங்களிடம் பெட்ரோல், டீசல் போட வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக காலை, மதியம், இரவு உணவுகளை வழங்கி வருகிறது என்றால் நம்ப முடிகிறதா!!!!.

உண்மைதான்,….

பெங்களூரில் ஓல்ட் மெட்ராஸ் சாலையில், இந்திரா நகர் ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு அருகே இருக்கும் வெங்கடேஸ்வரா சர்வீஸ் ஸ்டேஷன் என்ற பெட்ரோல் நிலையம்தான் இந்த சேவையை செய்து வருகிறது. இதற்காக இந்தியன் ஆயில்(ஐ.ஓ.சி.) நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து இந்த திட்டத்தை கடந்த வாரம் முதல் செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தின் படி, இந்த பெட்ரோல் நிலையத்தில் கார், இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்ப வரும் வாடிக்கையாளர்களை கனிவுடன் உபசரித்து விரைவாக சுடச்சுட உணவு  வழங்குகிறது.

நாட்டிலேயே இந்த திட்டம் இங்குதான் முதல் முறையாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பெங்களூரு மக்களுக்கு வயிறுதொடர்பான பிரச்சினைகள் வராமல்தடுக்க இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

வெங்கடேஸ்வரா பெட்ரோல் நிலையத்தின் உரிமையாளர் பிரகாஷ் ராவ் கூறியதாவது-

கடந்த 48ஆண்டுகளாக இந்த பெட்ரோல் நிலையத்தை நடத்தி வருகிறேன். பெங்களூரு மக்களுக்கு இலவசமாக உணவு அளிக்கும் இந்த திட்டம் குறித்து இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் கூறியவுடன் அவர்களும் ஒப்புக்கொண்டனர்.

இதன்படி, செப்டம்பர் மாதம் முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு 24 மணிநேரமும், காலை, மதியம், இரவு எந்நேரமும், அசைவம், சைவம் உணவுகள் இலவசமாக பசியாற வழங்கப்படும்.

மேலும், உணவு வேண்டாம் என்பவர்களுக்காக நொறுக்குத் தீனிகளும் வழங்கப்படும்.

பெங்களூரு மக்கள் தங்களுக்கு இருக்கும் வேலைபளுவில் சாப்பிடக்கூட நேரம் இல்லாமல் அலுவலகத்துக்கு பரபரப்பாக செல்ல வேண்டியது இருக்கிறது.

ஆனால், சாப்பிட வண்டியை நிறுத்துகிறார்களோ இல்லையோ, பெட்ரோல், டீசல் போட கண்டிப்பாக வண்டியை நிறுத்த வேண்டும்.

அவ்வாறு எங்கள் பெட்ரோல் நிலையத்தில் நிறுத்தும் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் இலவசமாக உணவு அளிக்கிறோம்.

“நீங்கள் பெட்ரோல் டேங்கை நிரப்புங்கள்”, “நாங்கள் உங்கள் வயிறை நிரப்புகிறோம்” என்று கூறி உணவு அளிக்கிறோம். 5 நிமிடங்களுக்குள் அவர்களுக்கு வேண்டிய உணவுகள் தயார்செய்யப்பட்டு சுடச்சுட வழங்கப்படும்.

இந்த உணவுகள் அனைத்தும் இஸ்கான் நிறுவனம் மூலம் சுத்தமான முறையில் தயார் செய்யப்படுகிறது. இந்த திட்டத்துக்கு ஒரு மாதத்துக்கு இந்திய ஆயில் நிறுவனம் நிதி உதவி அளிக்கிறது. ஒருவகையில் எங்கள் நிறுவனத்துக்கு விளம்பரம் என்றாலும், அடுத்த மாதமும் இந்த திட்டத்தை தொடர்ந்து, குறைந்த அளவு கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளோம்.

இந்த திட்டம் மூலம் எங்களுக்கு இழப்பு ஏற்பட்டாலும், அதை சமாளிக்கும் விதமாக ஐ.ஓ.சி. நிறுவனம் நிதி வழங்குகிறது. அடுத்து வரும் நாட்களில் இதே போன்ற திட்டத்தை பெங்களூரு நகரம் முழுவதும் 100 பெட்ரோல் நிலையங்களில் செயல்படுத்த ஐ.ஓ.சி. திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

 

 

PREV
click me!

Recommended Stories

முஸ்லிம்கள் பீப் சாப்பிட கூடாது.. பசுவை தேசிய விலங்காக அறிவிக்கணும்.. அதிரடி கிளப்பும் இஸ்லாமிய கட்சி!
காதல் கணவரை கொலை செய்து நாடகமாடிய ஜோதி! விசாரணையில் குடும்பத்துடன் சேர்ந்து கொன்றது அம்பலம்! என்ன காரணம்?