
பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் செய்து கொடுத்ததற்கு 2 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாக கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்ய நாராயணா மீது எழுந்த குற்றச்சாட்டு குறித்த தகவல் டிஐஜி ரூபாவுக்கு எப்படி கிடைத்தது என்ற ருசிகர தகவல் கிடைத்துள்ளது.
கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக ரூபா கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் நியமிக்கப்பட்டார். அவர், அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலாளர் சசிகலா அடைக்கப்பட்டுள்ள பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் திடீர் சோதனை நடத்தி சிறைத்துறை டி.ஜி.பி.க்கு அறிக்கை அனுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரூபா பொறுப்பு ஏற்றதும் அவருக்கு, பரப்பன அக்ரஹாரா சிறையில் பணியாற்றும் ஜெயிலர் ஒருவர் தனது பெயரை குறிப்பிடாமல் மொட்டை கடிதம் ஒன்றை எழுதியதாக கூறப்படுகிறது.
அந்த கடிதத்தில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறைக்கு வந்த பிறகு, அங்குள்ள உயர் அதிகாரிகள் முதல் கீழ்மட்ட ஊழியர்கள் வரை பலருக்கும் பணம் கொடுக்கப்பட்டு வந்ததாகவும், ஆனால் சமீப காலமாக கீழ் மட்டத்தில் உள்ளவர்களுக்கு பணம் சரியாக வரவில்லை என்றும் அவர் கூறி இருந்ததாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்தே பெண் அதிகாரி ரூபா திடீரென்று பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்று சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒரு மொட்டை கடிதம் செய்த வேலை இன்று கர்நாடக அரசுக்கு பெரும் தலைவலியைக் கொடுத்துள்ளது.