
பள்ளி, கல்லூரிகளில் அனைவரும் ஒரே சீருடையை அணிய வேண்டும் என்றும் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த மாணவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிப்பதால், கர்நாடகாவில் சர்ச்சை உருவாகியிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு மங்களூரில் உள்ள ஒரு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து மாணவ , மாணவிகள் சிலர் காவித் துண்டு அணிந்து வந்தனர். ஹிஜாப் அணிந்தால் காவி துண்டு அணிவோம் என்றும் இந்து மாணவிய, மாணவர்கள் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து பல கல்வி நிறுவனங்களிலும் இதே சம்பவம் நடந்தேறியது.
இதனையடுத்து கர்நாடகாவில் பெரும்பாலான 11-12ஆம் வகுப்புகளில் படிக்கும் பியூ கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தொடர்ந்து வரிசையாக தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் இஸ்லாமிய மாணவிகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே வேளையில் ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகள் வகுப்புக்குள் அனுமதிக்கப்படுவதில்லை என்றும் ஆப்சென்ட் போடப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால், கர்நாடகாவில் இருக்கும் பியூ கல்லூரிகளில் பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் போராட்டம் நடத்தும் இந்து அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் மீது போலீஸாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் குண்டபூர் பாஜக எம்எல்ஏ ஹலடி ஸ்ரீனிவாஸ், “உங்கள் பெண் குழந்தைகளை ஹிஜாப் அணியாமல் கல்லூரிக்கு அனுப்புங்கள்” என்று இஸ்லாமிய பெற்றோருக்கு அறிவுரை வழங்கினார். இதற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் குண்டபுராவில் கல்லூரிக்குள் செல்லாதவாறு தடுத்து நிறுத்தப்பட்ட இஸ்லாமிய மாணவிகளின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், கல்லூரி தலைமை ஆசிரியருடன் மாணவிகள் உருக்கமாக பேசும் காட்சியும் இடம் பெற்றுள்ளன. “எங்களை உள்ளே விடுங்க.. எங்க படிப்பு கெடுது.. ப்ளீஸ் கல்லூரிக்குள் விடுங்கள். இத்தனை நாட்களாக அணிந்துவந்தபோது பிரச்சினை இல்லையே. தேர்வுக்கு ரெண்டு மாசம்தான் இருக்கு.” என்று இஸ்லாமிய மாணவிகள் கெஞ்சி கண்ணீர் விடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஆனால், அதை காதில் வாங்காமல், தலைமையாசிரியர் கதவை இழுத்து மூடும் காட்சியும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தேசிய அளவில் விவாதமாகி வருகிறது.