ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களையும் தடை செய்ய வேண்டும் - சாமியார் ராம்தேவ் வினோத கோரிக்கை

First Published Jan 10, 2017, 6:01 PM IST
Highlights


நாட்டில் தொடர்ந்து ரூ. 2 ஆயிரம் நோட்டுகள் இருந்தால் கள்ள நோட்டுகள் உருவாக வாய்ப்பு அளிக்கப்பட்டு விடும். ஆதலால், எதிர்காலத்தில் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் நிறுத்தப்பட வேண்டும் என்று சாமியார் பாபா ராம்தேவ் வினோத கோரிக்கை எழுப்பியுள்ளார்.

சட்டீஸ்கர் மாநிலம், ராய்பூரில் சாமியார் ராம்தேவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “ நாட்டில் இப்போது புழக்கத்தில் இருக்கும் ரூ. 2 ஆயிரம் நோட்டுகளைப் போல் எதிர்காலத்தில் கள்ள நோட்டுகள் சந்தையில் புழக்கத்துக்கு வந்துவிடலாம். அப்படி வந்தால், அது பாதகமான விளைவுகளை பொருளாதாரத்தில் உண்டாக்கி, சமீபத்தில் செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ. 1000, ரூ.500 நோட்டுகளைப் போல் மாறிவிடும்.

போலி ரூ. 2 ஆயிரம் நோட்டு என்று அச்சடிப்பதற்கு எளிதாகவும், கடத்திச் செல்ல ஏதுவாகவும் இருக்கும். இதைக் கண்டுபிடிப்பது கடினம். ஆதலால், எதிர்காலத்தில் மத்திய அரசு, ரூ.2 ஆயிரம் நோட்டை தடை செய்ய வேண்டும்.

எதிர்காலத்தில் பணத்தை பயன்படுத்தினால் அதிக தேவை ஏற்படும். அதற்கு பதிலாக,  நாம் அனைவரும் பணம் இல்லா பரிவர்த்தனைக்கும், பணமில்லா பொருளாதாரத்துக்கும் மாற வேண்டும். டிஜிட்டல் பரிவர்த்தனையை நோக்கி நாம் நகரும்போது, பொருளாதாரத்தில் நம்பகத்தன்மையும்,வெளிப்படைத்தன்மையும் உறுதி செய்யப்படும்.

நாட்டை வலிமையாக்க பிரதமர் மோடி செயல்படுத்தும் அனைத்து திட்டங்கள் மீதும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நல்ல நாட்களுக்காக ஒரு கட்சியையும், ஒருநபரையும் சார்ந்து இருக்கக் கூடாது. அரசும், மக்களும் இணைந்து செயல்பட்டால்தான் நல்ல, வளமான நாட்களை கொண்டு வர முடியும். கருப்பு பணத்தை ஒழிக்க, பிரதமர் மோடி ரூ.500, ரூ.1000 நோட்டுகளை ஒழித்தது துணிச்சலான நடவடிக்கை'' எனத் தெரிவித்தார்.

click me!