அயோத்தியில் ராமர், சீதை சிலைகளுக்காக பிரம்மாண்ட பாறைகள்! அனுப்புவது யார் தெரியுமா?

By SG BalanFirst Published Jan 25, 2023, 1:46 PM IST
Highlights

அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலில் ராமர், சீதை சிலைகளை வடிக்க இரண்டு பெரும் பாறைகளை நேபாள அரசு அனுப்ப உள்ளது.

அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலில் ராமர், சீதை சிலைகளை வடிக்க இரண்டு பெரும் பாறைகளை நேபாள அரசு அனுப்ப உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கோயிலில் ராமர் மற்றும் சீதையின் சிலைகளை அமைப்பதற்காக நேபாளத்தில் இருத்து இரண்டு பெரிய பாறைகள் வரவுள்ளன. இமய மலை அடிவாரத்தில் பாயும் கண்டகி ஆற்றுப் பகுதியிலிருந்து இந்தப் பாறைகள் எடுத்துவரப்பட உள்ளன.

அதுமட்டுமின்றி, உலோகத்தால் ஆன சிவ தனுசு ஒன்றையும் நேபாளம் வழங்க உள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் முன்னாள் துணைப் பிரதமரும் நேபாள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பிமலேந்திர நிதி கூறுகையில், “இமாயத்தின் பாறைகளை அயோத்திக்கு அனுப்புவது நேபாளம் – இந்தியா இடையே நல்லுறவை வலுப்படுத்தும் என்று நம்புகிறேன். அயோத்தி ராமர் கோயிலுக்கு ஜனக்பூர் மக்கள் சார்பில் வழங்கும் பரிசாக சிவ தனுசை வழங்க வேண்டும் என்றும் நான்தான் கூறினேன்” என்றார்.

நேபாளத்தின் ஜனக்பூர் சீதையின் தந்தையாகிய ஜகனர் ஆண்ட பகுதி என்று சொல்லப்படுகிறது. இதனால் ஜனக்பூர் மக்கள் ராமர் பிறப்பைக் கொண்டாடுவது மட்டுமின்றி ராமருக்கும் சீதைக்கு திருமணமானதையும் கொண்டாடி வருகிறார்கள். “நாங்கள் அயோத்தியுடன் பல நூற்றாண்டுகளாக தொடர்பு கொண்டிருக்கிறோம்” என்கிறார் பிமலேந்திர நிதி.

நேபாளம் அனுப்ப உள்ள பாறை கற்களில் ஒன்று 18 டன்னும் மற்றொன்று 12 டன்னும் எடை கொண்டது. அவற்றுக்கு பூஜை செய்து அயோத்திக்கு அனுப்ப ஆயத்தமாக வைத்துள்ளனர். பிப்ரவரி 1ஆம் தேதி அவை அயோத்திக்குக் கொண்டுவரப்படும்.

பிம்லேந்திர நிதி இதுதொடர்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அரசு அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளார். 2020ஆம் ஆண்டு ராமர் – சீதை திருமண வைபவத்தைக் கொண்டாடும் நிகழ்வில், நேபாளத்துக்கான அப்போதைய இந்தியத் தூதுவர் மன்ஜீவ் பூரி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அப்போதுதான் முதல் முறையாக அயோத்தி ராமர் கோயிலுக்கு நேபாளம் பங்களிப்பது பற்றி பேசப்பட்டது என்கிறார் நிதி.

பாறைகளுடன் வழங்கப்படும் சிவ தனுசு (வில்) எட்டு உலோகங்களின் கலவையால் உருவாக்கப்படுகிறது என்றும் குறைந்தபட்சம் ஆயிரம் ஆண்டுகள் அது நன்றாக இருக்கும் என்றும் நிதி கூறுகிறார்.

click me!