
ரயில் பயணங்களில் கூடுதல் லக்கேஜ் கொண்டு செல்லும் பயணிகளிடம், அதற்கான கட்டணம் வசூலிக்கப்படும் என ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது. கட்டணம் ஏதும் செலுத்தாமல் அனுமதிக்கப்பட்ட அளவைக் கடந்து அதிக அளவில் லக்கேஜ் கொண்டு செல்லும் பயணிகளிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான பயணத்தை போலவே ரயில் பயணிகள் இலவசமாக எவ்வளவு எடை கொண்ட லக்கேஜை தங்களுடன் கொண்டு செல்லலாம் என்ற விவரம் வெளியாகியுள்ளது. இந்த கட்டண நடைமுறை தேஜஸ் போன்ற தனியார் ரயில்களுக்கு இருந்து வந்த நிலையில் இனி அனைத்து ரயில்களுக்கும் இது கொண்டு வரப்படும் எனத் தெரிகிறது.
> ஏசி முதல் வகுப்பு - 70 கிலோ கிராம்
> ஏசி 2-டயர் ஸ்லீப்பர் / முதல் வகுப்பு - 50 கிலோ கிராம்
> ஏசி 3 - டயர் ஸ்லீப்பர் / ஏசி சேர் கார் - 40 கிலோ கிராம்
> ஸ்லீப்பர் கிளாஸ் - 40 கிலோ கிராம்
> இரண்டாம் வகுப்பு - 35 கிலோ கிராம்
இது தவிர லக்கேஜுக்கான கட்டணம் செலுத்தி ஒவ்வொரு பயணியும் அதிகபட்சமாக ஏசி முதல் வகுப்பு - 150 கிலோ கிராம், ஏசி 2-டயர் ஸ்லீப்பர் / முதல் வகுப்பு - 100 கிலோ கிராம், ஸ்லீப்பர் கிளாஸ் - 80 கிலோ கிராம், இரண்டாம் வகுப்பு - 70 கிலோ கிராம் வரை கொண்டு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலவசமாக கொண்டு செல்லும் லக்கேஜுக்கான எடையும் இந்த அதிகபட்ச எடையில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கூடுதல் லக்கேஜுக்கான புக்கிங்கை ரயில் புறப்பாட்டுக்கு 30 நிமிடங்கள் முன்னர் வரையில் லக்கேஜ் புக்கிங் அலுவலகத்தில் பயணிகள் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரயில் டிக்கெட் முன்பதிவின்போதும் பயணிகள் லக்கேஜுக்கு கட்டணம் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுமதிக்கப்பட்டு எடைக்கு மேல் பயணிகள் கூடுதல் லக்கேஜ் கொண்டு செல்வது உறுதியானால் கூடுதல் எடைக்கான அபராதம் செலுத்த வேண்டி இருக்கும். இது அந்த எடைக்கான கட்டணத்தை காட்டிலும் ஆறு மடங்கு கூடுதலாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல லக்கேஜ் பைகளுக்கு அளவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.