
பெங்களூரு ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சென்ற பெண்ணை தாக்கி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் 3 ஆண்டுகளுக்குப் பின் ஆந்திராவில் கைது செய்யப்பட்டார்.
பெங்களூருவில் வங்கி அதிகாரியாக பணி புரிந்து வரும் ஜோதி உதய் என்ற பெண், கடந்த 2013-ம் ஆண்டு ஏ.டி.எம். மையத்துக்குள் பணம் எடுக்கச் சென்றார்.
அப்போது, அவரை பின்தொடர்ந்து சென்ற கொள்ளையர் ஒருவர் திடீரென்று ஏ.டி.எம். மையத்தில் புகுந்து, துப்பாக்கி மற்றும் அரிவாளை எடுத்து அவரை மிரட்டி பணம் பறித்தார்.
பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த நபர், அரிவாளால் ஜோதி உதயை சரமாரியாக வெட்டி அவருடைய செல்போன் மற்றும் ஏ.டி.எம். கார்டை பறித்துக்கொண்டு தப்பிச் சென்று விட்டார்.
இதில் பலத்த காயமடைந்த அவர், தீவிர சிகிச்சைக்குப் பின் குணமடைந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிச்சியை ஏற்படுத்தியது.
கொள்ளையனை பிடிக்க 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
இதனிடையே, மூன்று ஆண்டுகளுக்குப் பின், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியில் கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில் அவருடைய பெயர் மதுக்கர் ரெட்டி என்பதும், பெங்களூரு ஏ.டி.எம். மையத்தில் பெண் அதிகாரியை தாக்கி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.