
அதிர்ஷ்டம் எப்போதாவது தான் கதவை தட்டும் என்பதை போல், நபர் ஒருவருக்கு ஏ.டி.எம். இயந்திரத்தில் அதிர்ஷ்டம் காத்துக் கொண்டு இருந்தது. வழக்கம் போல் வங்கி கணக்கில் இருந்து சிறு தொகையை செலவிற்காக எடுக்க அந்த நபர் ஏ.டி.எம். மையத்திற்கு சென்று இருக்கிறார். ஏ.டி.எம். இல் ரூ. 500 எடுக்க முற்பட்டவருக்கு ஏ.டி.எம். இயந்திரம் ஐந்து 500 ரூபாய் நோட்டுக்களை கொடுத்து இருக்கிறது.
நாக்பூர் மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவர் ஏ.டி.எம். ஒன்றிற்கு சென்று தனது வங்கி அக்கவுண்டில் இருந்து ரூ. 500 எடுக்க முற்பட்டார். முன் எப்போதும் இன்றி, ஏ.டி.எம். இயந்திரத்தில் இருந்த ஐந்து 500 ரூபாய் நோட்டுக்கள் வெளி வந்தன. அதை பார்த்ததும், அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியில் அதே நபர் மீண்டும் தனது அக்கவுண்டில் இந்து ரூ. 500 எடுக்க முயன்றார். அப்போதும் அவருக்கு ஐந்து 500 ரூபாய் நோட்டுக்கள் கிடைத்தன.
ஏ.டி.எம். இயந்திரத்தில் கோளாறு:
நாக்பூர் மாவட்டத்தின் கபர்கேடா டவுனில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்தில் இருந்த இயந்திரத்தில் தான் இந்த குளறுபடி ஏற்பட்டது. இந்த செய்தி எப்படியோ காட்டுத் தீ போன்று பரவியதை அடுத்து, அதே ஏ.டி.எம்.-இல் தான் பணம் எடுப்பேன் என பலர் அந்த பகுதிக்கு குவிந்தனர். இதன் காரணமாக அந்த ஏ.டி.எம். வாயிலில் கூட்டம் வரிசை கட்டி நின்றது.
இது பற்றிய தகவலை வங்கி வாடிக்கையாளர் ஒருவர் காவல் துறையிடம் தகவல் தெரிவிக்கும் வரை தொடர்ந்து இருக்கிறது. காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததை அடுத்து சம்பந்தப்பட்ட ஏ.டி.எம். மையத்திற்கு விரைந்த உள்ளூர் போலீஸ் அதிகாரிகள் ஏ.டி.எம். இயந்திரத்தை மூடினர். பின் வங்கிக்கும் இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏ.டி.எம். இயந்திரத்தில் இருந்து கூடுதல் பணம் வெளியானது என கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. ஏ.டி.எம். இயந்திரத்தில் ரூ. 100 நோட்டுக்கள் வைக்கப்பட வேண்டிய இடத்தில் தவறுதலாக ரூ. 500 நோட்டுக்கள் வைக்கப்பட்டதே இந்த தொழில்நுட்ப கோளாறுக்கு காரணம் ஆகும். இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.