
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஏ.டி.எம்.களில் இன்றும் போதிய அளவில் பணம் இல்லாததால், பணம் மாற்ற வந்த பொதுமக்கள் பணத்தை மாற்ற முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கடந்த 9ம் தேதி இரவு, 500,1000 நோட்டுகள் செல்லாது என கூறி இந்தியா முழுதும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினர் பிரதமர் மோடி. மேலும், அறிவிப்பு வெளியான மறுநாளே வங்கிகள் செயல்படாது எனவும், இரு தினங்களுக்கு ஏ.டி.எம்., செயல்படாது எனவும் அறிவித்தார். இதனால், இந்தியா முழுதும் மக்கள் பணத்தை மாற்றுவதற்காக, அன்று இரவே ஏ.டி.எம்., மையங்களை சூழ்ந்துவிட்டனர். இதனால் அன்றைய தினமே பல ஏ.டி.ஏம்.,கள் பணம் இல்லாமல் முடங்கிவிட்டன. பின்னர், வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.,கள் திறக்கப்பட்டதும் மக்கள் பணத்தை மாற்றுவதற்காக, நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலநிலை, கடந்த 10 நாட்களாக தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது.
மேலும்,பணம் எடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், விரலில் மை, என்று மத்திய அரசு ஒவ்வொரு நாளும் ஒரு அறிவிப்பினை வெளியிட்டு வருவதால் பெரும்பாலான மக்கள், ஏ.டி.எம்., மையங்களுக்கு சென்றால் விரைவில் பணம் எடுக்கலாம் என ஏ.டி.எம்., மையங்களையே நாடுகின்றனர். ஆனால், பெரும்பாலான ஏ.டி.எம்., மையங்களில் போதிய அளவு பணம் இல்லாத காரணத்தாலும், குறைவான அளவே பணம் இருப்பதாலும் விரைவில் பணம் தீர்ந்து விடுகின்றன.
மேலும், தற்போது நடைமுறையில் உள்ள ஏ.டி.எம்., மையங்களில் புதிய நோட்டுகளை வைப்பதற்கு ஏதுவான அடுக்குக்கள் இல்லாததால் புதிய ரூபாய் நோட்டுக்களை அதில் வைக்க முடியவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த அடுக்குகளை ஏ.டி.எம்., இயந்திரங்களில் பொருத்துவதற்கு போதிய அளவு பணியாளர்களும் இல்லாததால் பல ஏ.டி.எம்., மையங்கள் முடங்கிய நிலையிலே உள்ளன. இதுதவிர, பொதுமக்கள் பலர் தங்களிடமுள்ள பல கார்டுகளுக்கு ஒரே நேரத்தில் பணத்தை எடுப்பதால், மற்றவர்கள் பணம் எடுக்க முடியாமல் தவிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழகதின் பல இடங்களில் ஏ.டி.எம்., மையங்கள் செயல்படாமல் காட்சிபொருளாகவே உள்ளன. குறிப்பாக சென்னையில் மக்கள் செயல்படும் ஏ.டி.எம்., மையங்களை தேடி நாள்முழுதும் சுற்ற வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. நள்ளிரவில் பணம் எடுக்கலாம் என்று செல்பவர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சுகிறது என்பது குறிபிடத்தக்கது.