2024 தேர்தலில் ரூ.1.5 லட்சம் கோடி செலவிடப்பட்டும், உண்மையான செலவுகள் ரகசியமாக உள்ளன. கட்சிகள் நன்கொடை மற்றும் விளம்பரங்களுக்காக கோடிக்கணக்கில் செலவு செய்தும், தேர்தல் முடிவில் உபரி பணம் எங்கே போகிறது என்ற கேள்வி எழுகிறது.
2024 மக்களவைத் தேர்தல் மற்றும் ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் நடந்த நான்கு சட்டமன்றத் தேர்தல்களில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கிட்டத்தட்ட ரூ.1.5 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது. ஆனாலும், இவ்வளவு பணமும் எங்கே போனது என்ற கேள்வி எழுகிறது.
இந்தியத் தேர்தல் ஆணையம் தேர்தல் செலவினங்களை முழுமையாக வெளியிட வேண்டும் என்று கட்டாயப்படுத்திய போதிலும், உண்மையான புள்ளிவிவரங்கள் குறித்து இன்னும் ரகசியம் நீடிக்கிறது. சில கட்சிகள் இணங்கினாலும், முழுமையான தேர்தல் செலவுகள் குறித்த விவரம் பொதுமக்களின் பார்வையில் இருந்து மறைக்கப்பட்டுள்ளது.
காமன்வெல்த் மனித உரிமைகள் அமைப்பான CHRI நடத்திய சமீபத்திய ஆய்வு, அரசியல் கட்சிகள் தேர்தலுக்காக எவ்ளவு செலவு செய்தன என்று அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.
தேர்தல் செலவினங்களுக்காக 22 அரசியல் கட்சிகளிடம் மட்டுமே ரூ.18,742.31 கோடி இருந்தது. தேர்தலில் போட்டியிட ரூ.3,861.57 கோடி செலவிடப்பட்டது. ரூ.7,416.31 கோடி நன்கொடையாகத் திரட்டப்பட்டது, மொத்த தொகையில் பாஜக 84.5 சதவீதத்தைப் பெற்றது. பாஜக அதிகபட்சமாக ரூ.1,737.68 கோடி செலவிட்டதாக அறிவித்தது. இது மொத்த செலவில் 45%க்கும் அதிகமாகும்.
அச்சு, தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளங்களை உள்ளடக்கிய ஊடக விளம்பரங்களுக்கு ரூ.992.48 கோடி செலவிடப்பட்டது. சமூக ஊடகங்கள் மற்றும் பிற ஆன்லைன் பிரச்சாரங்களுக்கு ரூ.196.23 கோடி செலவிடப்பட்டது. ஏழு கட்சிகள் மட்டுமே இத்தகைய செலவுகளை வெளிப்படுத்தியுள்ளன. நட்சத்திரப் பேச்சாளர்களின் பயணங்களுக்கு ரூ.830.15 கோடி செலவிடப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டர்கள் மற்றும் தனியார் ஜெட் விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ரூ.398.49 கோடிக்கு பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளுக்காகச் செலவாகியுள்ளன.
உபரி பணம் எங்கே போகும்?
தேர்தல் முடிவில், கட்சிகளின் கருவூலத்தில் ரூ.14,848.46 கோடி மிச்சம் இருந்த்து. இந்த உபரி பணம் எங்கே போகும்? பாஜக உட்பட ஆறு அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு முன்பு இருந்ததை விட, தேர்தலுக்குப் பின் அதிக பணத்தை பெற்றிருக்கின்றன! இது எப்படி நடந்தது?
தேர்தலுக்கு பிறகு பாஜக, தெலுங்கு தேசம், மார்சிஸ்ட் கம்யூனிஸ்டு, எல்.ஜே.பி. (ராம்விலாஸ்), சிக்கிம் ஜனநாயக முன்னணி (எஸ்.டி.எப்), அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏ.ஐ.யூ.டி.எப்.) ஆகிய ஆறு கட்சிகளிடம் ரூ.4,300 கோடி அதிகமாக நிதி இருப்பது தெரியவந்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, சிவசேனா, ஷிரோமணி அகாலிதளம் ஆகியவை தங்கள் செலவுகளைக்கூட வெளியிடவில்லை.
இத்தகைய பிரம்மாண்டமான புள்ளிவிவரங்கள் மூலம் ஒன்று தெளிவாகிறது - இந்தியாவில் தேர்தல்கள் இனி ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டு நடக்கவில்லை. பண பலத்தின் அடிப்படையில்தான் நடக்கிறது. அரசியல்வாதிகள் பல கோடி ரூபாய் செலவு செய்து பிரச்சாரங்களில் ஈடுபடுகிறார்கள். இவ்வளவு பணம் எங்கிருந்து வருகிறது, எங்கே போகிறது? இதனால் யாருக்கு லாபம்? என்று சாமானிய வாக்காளர்கள் யோசிக்கிறார்கள்.