ஒப்புதல் வாங்காமல் அரசு ஊழியர்கள் 2ஆவது திருமணம் முடிக்க கூடாது: அசாம் அரசு அதிரடி!

By Manikanda Prabu  |  First Published Oct 27, 2023, 4:16 PM IST

அரசு ஊழியர்கள் அரசாங்கத்தின் ஒப்புதல் இல்லாமல் 2ஆவது திருமணம் செய்ய முடியாது என அசாம் மாநில அரசு தெரிவித்துள்ளது


அசாம் அரசு ஊழியர்கள், தங்கள் மனைவி உயிருடன் இருந்தால், அரசாங்கத்தின் அனுமதியின்றி, அவர்களது தனிப்பட்ட சமூக சட்டத்தால் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் கூட, இரண்டாவது திருமணம் செய்ய முடியாது.

எந்த சமூகத்தையும் குறிப்பிடாமல், அசாம் அரசு ஊழியர்கள் இரண்டாவது திருமணத்திற்கு மாநில அரசின் அனுமதி பெற வேண்டும் என்று அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறினார். “"ஒரு மதம் உங்களை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள அனுமதித்தாலும், நீங்கள் மாநில அரசின் அனுமதியைப் பெற வேண்டும்.” என்று கூறினார்.

Tap to resize

Latest Videos

ஊழியர்களின் மரணத்திற்குப் பிறகு, கணவரின் ஓய்வூதியத்திற்காக இரு மனைவிகளும் சண்டையிடும் நிகழ்வுகள் நடப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அசாம் அரசு தனது ஊழியர்களுக்கான இந்த வழிமுறைகளை அலுவலக குறிப்பில் கடந்த 20ஆம் தேதி வெளியிட்டது. “மனைவி உயிருடன் இருக்கும்பட்சத்தில் அரசாங்கத்தின் அனுமதியின்றி யாரும் இரண்டாவதாக திருமணம் செய்ய முடியாது. இருப்பினும், தனிப்பட்ட சமூக சட்டத்தின் கீழ் அதற்கு அனுமதி இருக்கும்பட்சத்தில் அத்தகைய திருமணம் தற்போதைக்கு அனுமதிக்கப்படுகிறது.” என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், எந்த ஒரு பெண் அரசு ஊழியரும், தங்கள் கணவர் உயிருடன் இருந்தால், அரசின் அனுமதி பெறாமல், இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடியாது என உடனடியாக அமலுக்கு வந்துள்ள அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்டோபர் 31இல் ஆஜராக முடியாது; வேற வேலை இருக்கு: மஹுவா மொய்த்ரா!

முன்னதாக, அசாம் அரசாங்கம் மாநிலத்தில் உடனடியாக பலதார மணத்தை தடை செய்ய விரும்புவதாக அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இந்த ஆண்டின் தொடக்கத்தில் கூறியிருந்தார். “நாங்கள் பலதார மணத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும். செப்டம்பரில் நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் இந்த மசோதாவை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம், சில காரணங்களால் அதைச் செய்ய முடியவில்லை என்றால், ஜனவரி மாதம் நடைபெறவுள்ள கூட்டத்தொடரில் அதைச் செய்வோம்.” என்று அவர் கூறியிருந்தார்.

மாநிலத்தில் பலதார மணத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முன்மொழியப்பட்ட சட்டம் குறித்து கடந்த ஆகஸ்ட் மாதம் பொதுமக்களின் கருத்து கேட்பையும் அசாம் மாநில அரசு நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!