சத்தீஸ்கர் தேர்தலையொட்டி, முதல் தலைமுறை வாக்காளர்கள் மீது காங்கிரஸ் கட்சி கவனம் செலுத்தியுள்ளது
சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 7, 17ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து அம்மாநில தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அம்மாநில பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கிடையே இருமுனை போட்டி நிலவி வரும் நிலையில், முதல் தலைமுறை வாக்காளர்கள் மீது காங்கிரஸ் கட்சி கவனம் செலுத்தியுள்ளது.
அம்மாநிலத் தலைநகர் ராய்ப்பூரில் வருகிற 30ஆம் தேதி மாரத்தான் போட்டியை காங்கிரஸ் கட்சி நடத்தவுள்ளது. இதன் மூலம், இளம் வாக்காளர்களை சென்றடைய காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த முயற்சியானது முதல் தலைமுறை வாக்காளர்களைக் கவரும் முயற்சியாகக் கருதப்படுகிறது.
“மராத்தான் போட்டியில் போட்டி தூரத்தை முடிக்கும் முதல் 100 பேர் முதல்வர் பூபேஷ் பாகேலுடன் சிறப்பு உரையாடலுக்கான வாய்ப்பைப் பெறுவார்கள்.” என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்வில் இளம் வாக்காளர்கள் பங்கேற்க ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் பதிவு செய்வதற்கான எண்களை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. ஆஃப்லைனில், படிவங்கள் கட்சி ஊழியர்களால் முதல் முறை வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படும். முதல்வர் பூபேஷ் பாகேல், காங்கிரஸ் தலைவர் கன்ஹையா குமார் மற்றும் பிற விளையாட்டு செல்வாக்குமிக்கவர்களும் மாரத்தான் போட்டியில் பங்கேற்கின்றனர். காலை 7 மணிக்கு தலைநகரில் உள்ள டெலிபந்தா தாலாப் சதுக்கத்தில் தொடங்கும் இந்த ஓட்டம் காந்தி மைதானத்தில் முடிவடையவுள்ளது,
இந்த தீபாவளிக்கு ரூ.3 லட்சத்தில் வாங்கக் கூடிய சிறந்த பிரீமியம் பைக்குகள்!
காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் சத்தீஸ்கர் மாநிலத்தில், 2018 சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில் 15இல் 5000-க்கும் குறைவாகவே வெற்றி வித்தியாசம் இருந்தது. தேர்தல் ஆணையத்தின் தற்போதைய தகவல்களின்படி, அம்மாநிலத்தில் முதல் தலைமுறை வாக்காளர்களின் எண்ணிக்கை 7,23,771ஆக உள்ளது. அதாவது, மாநிலத்தின் மக்கள் தொகையில் 25 சதவீதத்துக்கும் அதிகமானோர் 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள்.
ஆளும் காங்கிரஸ் 3,32,770 உறுப்பினர்களைக் கொண்ட ‘ராஜீவ் யுவ மிதன் கிளப்’ என்ற திட்டத்தை உருவாக்கியது. இதன் மூலம், 50,000 க்கும் மேற்பட்ட வேலைகளை வழங்கியதாகவும், ஆத்மானந்த் ஆங்கில வழிக் கல்லூரிகளை அமைத்ததாகவும், கல்லூரி மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவையை வழங்கியதாகவும் அக்கட்சி கூறுகிறது.