அசாம் முதல்வர் ஹிமாந்தா சர்மா, தன் மீது அவதூறு பரப்பியதாக பிரபல செய்தி நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்
பாஜக ஆட்சி பொறுப்பேற்றது முதலே எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்படுகிறது. பாஜக ஆளாத மாநிலங்களின் கட்சிகள் தங்களது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் எனவும், அப்படி இல்லாத கட்சிகளுக்கு மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
மேலும், ஊழல் ஒழிப்பு குறித்து பேசும் பாஜக, எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துகிறது. அவர்களே பாஜகவுக்கு வந்தவுடன் அவர்கள் மீதான ஊழல் வழக்குகள் கைவிடப்படுகிறது. பாஜகவுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் அழுத்தம் கொடுக்கப்படுகிறது எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில், பாஜகவில் இணைந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் 25 பேரில், 20 பேர் மீதான ஊழல் வழக்குகளில் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நேற்று முன் தினம் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாள் கட்டுரை வெளியிட்டிருந்தது. அதில், பா.ஜ.க.வுக்குத் தாவிய எதிர்க்கட்சித் தலைவர்கள் 25 பேரில், 20 பேர் மீதான ஊழல் வழக்குகளில் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், 3 பேர் மீதான வழக்குகள் மொத்தமாக முடித்து வைக்கப்பட்டுள்ளாதாக கூறப்பட்டிருந்தது.
காங்கிரஸிலிருந்து 10 பேர், என்சிபி மற்றும் சிவசேனாவிலிருந்து தலா 4 பேர், திரிணாமுல் காங்கிரஸிலிருந்து 3 பேர், தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து 2 பேர், சமாஜ்வாதி மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸிலிருந்து தலா ஒருவர் என அவர்களது பெயர்களை குறிப்பிட்டு, வழக்கு விவரங்கள், அவை கைவிடப்பட்டது என அனைத்தும் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு, விசாரணை அமைப்புகளை தவறாகப் பயன்படுத்தியதாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு அமலாக்க இயக்குநரகம் (ED) மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகள் நடவடிக்கை எடுத்த முக்கிய அரசியல்வாதிகளில் குறைந்தது 95 சதவீதம் பேர் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அந்த கட்டுரை கூறுகிறது.
பாஜகவை "வாஷிங் மிஷின்" என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருவதற்கிடையே மக்களவைத் தேர்தலையொட்டு வெளியாகியுள்ள இந்த கட்டுரை நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அசாம் முதல்வர் ஹிமாந்தா சர்மா, தன் மீது அவதூறு பரப்பியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக அண்ணாமலை மீது திமுக புகார்!
“ஊழல்பேர்வழிகள் பாஜகவில் சேர்ந்ததும் அவர்கள் மீதான வழக்குகளை நிறுத்தி வைக்கிறது பாஜக” என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. அதில், அசாம் முதல்வர் ஹிமாந்தா சர்மாவின் பெயரும் இடம் பெற்றிருந்தது. 'பாஜகவில் சேர்ந்ததும் இவர் மீதான வழக்கு மாயமானது' என இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட கட்டுரைக்கு எதிராக வழக்கறிஞர் மூலம் அவதூறு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் ஹிமாந்தா சர்மா.
“என்னை மேற்கு வங்க சாரதா சிட் ஃபண்ட் விவகாரத்தில் சாட்சியாக 2014இல் சேர்த்திருந்தது சிபிஐ. அப்போது நான் காங்கிரஸில் இருந்தேன். சாட்சியாக ஆஜராகி விளக்கங்கள் கொடுத்தேன். என் மீது எந்த குற்றமும் சாட்டப்படவில்லை. வழக்கிலிருந்து என்னை விடுவித்த பிறகு நான் பாஜகவில் இணைந்தேன். இது இப்படியிருக்க, என் மீது அவதூறு பரப்பும் விதமாக, அரசியல் ரீதியாக என்ன தாக்க, இந்தியன் எக்பிரஸ் கட்டுரை பிரசுரித்திருக்கிறது.” என அசாம் முதல்வர் ஹிமாந்தா சர்மா தெரிவித்துள்ளார்.