கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக எல்லைப் பிரச்சினையில் சிக்கிவரும் அசாம், மேகாலயா மாநிலங்கள், உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளன.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக எல்லைப் பிரச்சினையில் சிக்கிவரும் அசாம், மேகாலயா மாநிலங்கள், உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளன.
மேகாலயா மற்றும் அசாம் மாநிலங்களின் முதல்வர்கள் எல்லைப் பிரச்சினை தொடர்பாக செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேகாலயா உயர் நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து இரு மாநிலங்களும் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளன.
மேகாலயா மற்றும் அசாமா மாநிலங்களுக்கு இடையே 884.9 கி.மீ தொலைவுக்கு எல்லை அமைந்துள்ளன. இந்த எல்லையில் 12 இடங்களில் இரு மாநிலங்களுக்கு இடையே 50 ஆண்டுகாலமாக பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. இந்த பிரச்சினையைத் தீர்க்க பலமுறை பல சுற்றுப் பேச்சு வார்த்தை நடந்தும் தீர்க்க முடியவில்லை.
இதையடுத்து, கடந்த ஆண்டு மார்ச் 29ம் தேதி மத்திய அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா ஷர்மா, மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமானது.
இதன்படி 12 பிரச்சினைக்குரிய இடங்களில் 6 இட எல்லையை மாற்றி அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எதிர்த்து மேகலாயா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றத்தின் ஒருநீதிபதி அமர்வு, எல்லையை மறுவரையறைசெய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு தடை விதித்து கடந்த டிசம்பர் 9ம் தேதி உத்தரவிட்டது. இதை எதிர்த்து டிவிஷன் பெஞ்சில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து, அசாம், மேகாலயா மாநிலங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேகாலயா உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதிகள் பிஎஸ் நரசிம்மா, ஜேபி பர்திவாலா ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. இதில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, இந்த மனுவை உடனடியாக விசாரித்து, மேகாலயா உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடைவிதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, அனைத்து விதமான ஆவணங்களையும் தாக்கல் செய்ய சொலிசிட்டர் ஜெனரலுக்கு உத்தரவிட்டனர்.