
சிறுமி ஆசிஃபாவின் கொலை வழக்கு இந்தியாவையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு சம்பவம். கோவிலில் வைத்து ஒரு 8 வயது சிறுமி பாலியல் வன்புணர்வுக்குள்ளாகி, கொலை செய்யப்பட்ட சம்பவம் அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆசிஃபாவிற்கு நேர்ந்த கொடுமையை கண்டித்து பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
அதனை தொடர்ந்து ஆசிஃபா வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக சஞ்சி ராம், அவரது மகன் விஷால் மேலும் ஒரு சிறுவன் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சஞ்சி ராமின் வாக்குமூலம் தற்போது வெளியகியுள்ளது.
அதில் முஸ்லிம் பக்கர்வால் சமுதாய மக்களை மிரட்டவே ஆசிஃபாவை, ஜனவரி10 அன்று தான் கடத்தியதாக சஞ்சி ராம் தெரிவித்திருக்கிறார். ஆசிஃபா பலாத்காரத்துக்கு உள்ளான விவரம் முதலில் தனக்கு தெரியாது என்றும் , 13 தேதி தான் அந்த பலாத்கார சம்பவம் நிகழ்ந்திருப்பதை தனது உறவுக்கார சிறுவன் மூலம் தான் அறிந்ததாகவும் தெரிவித்த சஞ்சி ராம், தனது மகனுக்கும் இந்த சம்பவத்தில் பங்கு இருக்கிறது என அறிந்த பிறகே ஆசிஃபாவை கொலை செய்ய முடிவு செய்ததாகவும் அதிர்ச்சித்தகவலை வெளியிட்டிருக்கிறார்.
ஜனவரி 14 அன்று ஆசிஃபாவை கொலை செய்து, எந்த வித தடயமும் வெளியேறாமல் பார்த்துக்கொள்ள அவர் முடிவு செய்திருக்கிறார். ஆனால் தனது திட்டம் தோல்வியடைந்துவிடவும், ஆசிஃபா உடலை ஹீராநாத் கால்வாய் அருகே வீசிச்சென்றிருக்கின்றது இந்த கும்பல்.
அதன் பிறகு இந்த கொடூர சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பை தொடர்ந்து, காவல்த்துறை தீவிர விசாரணை மேற்கொண்ட போது, முதலில் தனது உறவுக்கார சிறுவனை குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி செய்துவிட்டு, பின்னர் அவனை விடுவிப்பதாகவும் வாக்களித்திருக்கிறார் சஞ்சி ராம். ஆனால் அதனை தொடர்ந்து நடந்த விசாரணையில் அனைவரும் மாட்டிக்கொண்டனர். முஸ்லிம் பக்கர்வால் சமுதாய மக்களை மிரட்டவே இந்த கடத்தல் சம்பவத்தை நிகழ்த்தியிருப்பதாக, சஞ்சி ராம் வாக்கு மூலத்தில் தெரிவித்திருப்பது, அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பேரதிர்ச்சியையும் கடும் கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.