ராஜஸ்தான் மாநிலத்தில் அமைச்சரவை அமைப்பதில் தாமதம் ஏற்படுவதால் அம்மாநில பாஜக அரசை முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் சாடியுள்ளார்.
மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் தெலங்கானா, மிசோரம் தவிர மற்ற மூன்று மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. ஆனால், முதல்வர் தேர்வில் அக்கட்சி தாமதம் செய்தது. இதனால், எதிர்க்கட்சிகள் பாஜகவை கடுமையாக விமர்சித்தன. இதையடுத்து, மூன்று மாநிலங்களுக்கும் அடுத்தடுத்து முதல்வர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், அமைச்சரவை அமைப்பதில் தாமதம் செய்வதாக பாஜக விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலத்தில் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றதற்கிடையே, ராஜஸ்தான் மாநிலத்தில் அமைச்சரவை அமைப்பதில் தாமதம் ஏற்படுவதால் அம்மாநில பாஜக அரசை முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் சாடியுள்ளார். இதனால், மக்கள் மத்தியில் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், ஆட்சி ஸ்தம்பித்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
undefined
தங்கள் பிரச்சினைகளுக்கு எந்தெந்த அமைச்சர்களை அணுக வேண்டும் என மக்கள் எதிர்பார்த்து வருவதாகவும், அரசாங்கம் சுமூகமாக இயங்குவதற்கு விரைவில் அமைச்சரவை அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
“ராஜஸ்தான் மக்கள் பாஜகவுக்கு வாய்ப்பளித்துள்ளனர். ஆனால் 22 நாட்கள் ஆகியும் அமைச்சரவை அமைக்கப்படவில்லை. இதனால் ஆட்சி ஸ்தம்பித்துள்ளது. அரசாங்கத்தின் துறைகள் குழப்பமான நிலையில் உள்ளது.” என அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ராஜஸ்தான் முதல்வராக முதல்முறை எம்.எல்.ஏ.வான பஜன்லால் சிங் பதவியேற்றுள்ளார். துணை முதல்வர்களாக தியா குமாரி மற்றும் பிரேம் சந்த் பைரவா ஆகியோர் பதவியேற்றுள்ளனர். ஆனால், அமைச்சரவை இன்னும் பதவியேற்கவில்லை. இதனிடையே, சுமார் 15 எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் எனவும், இன்னும் ஓரிரு நாட்களில் அமைச்சரவை அமைக்கப்படும் என பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.
பிரதமரின் தொலைநோக்கு பார்வையை பாராட்டிய கிறிஸ்தவ சமூகத் தலைவர்கள்!
மேலும், சிரஞ்சீவி திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகள் மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்பதும் ஊடகங்கள் மூலம் தெரிய வந்துள்ளதாக அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் தொடங்கி வைத்த திட்டமான இதன் கீழ், ராஜஸ்தான் மக்களுக்கு ரூ.25 லட்சம் வரை கட்டணமில்லாமல் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
“பொது மக்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாத வகையில் நமது அரசின் திட்டங்கள் குறித்த சூழ்நிலையை தற்போதைய அரசு தெளிவுபடுத்த வேண்டும், புதிய முறை அமல்படுத்தப்படும் வரை முந்தைய முறை தொடர வேண்டும்.” என அசோக் கெலாட் கூறினார்.
அதேசமயம், முந்தைய அரசு அறிமுகப்படுத்திய மக்கள் நலத் திட்டங்கள் பாஜக ஆட்சியில் நிறுத்தப்படும் என்ற காங்கிரஸின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த முதல்வர் பஜன்லால் ஷர்மா, முந்தைய காங்கிரஸ் அரசின் எந்த திட்டமும் நிறுத்தப்படாது என்று உறுதியளித்துள்ளார்.