டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு குறித்து உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூட்டியுள்ளார்
தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் வெகுகாலமாகவே மோசமாக உள்ளது. அண்டை மாநில விவசாயிகள் அறுவடைக் காலம் முடிந்து விவசாயக் கழிவுகளை எரிப்பது, புதிய கட்டுமானங்கள், பழைய கட்டடங்கள் இடிப்பு, வாகனங்களின் மிகுதி உள்ளிட்ட பல்வேறு காரணிகள் காற்று மாசுவுக்கு காரணமாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. காற்றுத் தரக் குறியீடு 400ஐ தாண்டியுள்ளது. நுரையீரலை ஆழமாக தாக்கி உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய மைக்ரோஸ்கோபிக் PM2.5 துகள்கள் டெல்லி அரசு நிர்ணயித்துள்ள வரம்பை விட ஏழு முதல் எட்டு மடங்கு உயர்ந்துள்ளது.
அமைச்சர் பொன்முடி மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் அதிரடி!
காற்று மாசுவால் பொதுமக்கள் சுவாசப் பிரச்சினை, கண் எரிச்சல் உள்ளிட்டவற்றால் அவதிப்பட்டு வருகின்றனர். தொடக்கப் பள்ளிகளுக்கு வருகிற 10ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காற்று மாசுவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை டெல்லி அரசு எடுத்து வரும் நிலையில், இதுகுறித்த உயர்நிலை ஆலோசனை கூட்டத்துக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் மற்றும் பிற துறைகளை சேர்ந்த மூத்த அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின்படி, ஒட்டுமொத்த காற்றின் தரம் ஐந்தாவது நாளாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. உலகளவில் தலைநகரங்களில் மிகவும் மோசமான காற்றின் தரத்தை டெல்லி கொண்டுள்ளது. ஆரோக்கியமாக ஒருவர் வாழ, பரிந்துரைக்கப்பட்ட காற்றுத் தரக் குறியீடு (AQI) 50க்கும் குறைவாக இருக்க வேண்டும். ஆனால், கடந்த சில நாட்களாக டெல்லியில் அது 400ஐத் தாண்டியுள்ளது. இது நுரையீரல் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆபத்தானது எனவும், நுரையீரல் புற்றுநோயின் அபாயத்தையும் ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.