மதுபான ஊழல் வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் முக்கிய குற்றவாளி: நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதம்!!

By Asianet Tamil  |  First Published Mar 22, 2024, 4:26 PM IST

மதுபான ஊழல் வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டு இருக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முக்கிய குற்றவாளி என்று அமலாக்கத்துறை இன்று நீதிமன்றத்தில் தெரிவித்தது.


மதுபான ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் ஜெக்ரிவாலை அமலாக்கத்துறை நேற்று கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இவரை பத்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்து இருக்கிறது. 

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிடர் ஜெனரல் எஸ்வி ராஜூ நீதிமன்றத்தில் கூறுகையில், ''மதுபான வியாபாரிகளிடம் இருந்து பணம் வசூலிப்பதில் முக்கிய சதிகாரராகவும், முக்கியமானவராகவும் டெல்லி முதல்வர் இருக்கிறார். இவர் நேரடியாகவே மதுபானக் கொள்கை திட்டங்களில் ஈடுபட்டுள்ளார்'' என்றார்.

Latest Videos

undefined

மேலும், டெல்லியில் கெஜ்ரிவாலுக்கும் மங்குடா ரெட்டிக்கும் இடையிலான சந்திப்பை சொலிசிடர் ஜெனரல் குறிப்பிட்டார். டெல்லி முதல்வர் மதுபான வியாபாரத்தில் ஆர்வம் காட்டியதையும் குறிப்பிட்டுப் பேசினார். 

மேலும் தேர்தலுக்கு கெஜ்ரிவால் 100 கோடி ரூபாய் கேட்டதாகவும், மகன் மற்றும் தந்தை இருவரிடம் இந்த நிதியை கேட்டதாகவும் தெரிவித்தார். இந்த விஷயத்தை மங்குடா ரெட்டி கூறியதாக நீதிமன்றத்தில் தெரிவித்த கூடுதல் சொலிசிடர் ஜெனரல், ரெட்டியின் தந்தை டெல்லியின் மதுபான விற்பனை முகவராக இருக்க வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார். கவிதாவுக்கு கொடுக்க வேண்டிய பத்து கோடி ரூபாயை ஏற்பாடு செய்யுமாறு தன்னிடம் கெஜ்ரிவால் கூறியதாகவும் ரெட்டி தெரிவித்துள்ளார்.

மதுபான வியாபாரத்திற்காக செய்து கொடுத்த சலுகைகளுக்காக அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் 100 கோடி ரூபாயை விஜய் நாயர் பெற்றுக் கொண்டார். இதில், 45 கோடி ரூபாய் கோவா தேர்தலுக்காக செலவு செய்துள்ளனர். சரத் ரெட்டியின் அறிக்கையை (அனுமதிப்பாளர்) படிக்கும் போது, குற்ற வருமானம் 100 கோடி லஞ்சம் மட்டுமல்ல, லஞ்சம் கொடுப்பவர்கள் பெற்ற லாபமும் கூட என்று கூடுதல் சொலிசிடர் ஜெனரல் தெரிவித்தார். 

நீதிமன்றத்தில் கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால், ரத்த அழுத்தம் திடீரென அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு குறைந்தது. இதையடுத்து, அவர் உடனடியாக நீதிமன்றத்தில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டார்.  

கெஜ்ரிவாலுக்கு இடைக்கால நிவாரணம் மறுத்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து கெஜ்ரிவாலின் அணி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரணை நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எனினும், விசாரணை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. 

இந்த நிலையில், அவரது கைதுக்கு எதிரான உச்ச நீதிமன்ற மனுவை கெஜ்ரிவால் அணி வாபஸ் பெற்றது. பிஆர்எஸ் கட்சியின் கே கவிதாவின் இதே கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்த சிறிது நேரத்திலேயே கெஜ்ரிவால் அணியும் வாபஸ் பெற்றது. ஆனால், கவிதாவை கீழ் நீதிமன்றத்திற்குச் செல்லச் சொன்ன அதே பெஞ்ச், கெஜ்ரிவாலின் மனுவை விசாரிக்க திட்டமிட்டு இருந்தது தெரிய வந்துள்ளது.

click me!