மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பாக டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலிடம் சிபிஐ ஒன்பது மணி நேரம் விசாரணை மேற்கொண்டது.
டெல்லி மதுபானக் கொள்கை ஊழலில் குற்றம்சாட்டப்பட்ட டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா ஏற்கனவே கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இந்த ஊழல் தொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் சிபிஐ கடந்த வாரம் சம்மன் அனுப்பி இருந்தது. நேற்று சிபிஐ தலைமையகத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆஜராகி இருந்தார். இவர் ஆஜராவதை முன்னிட்டு சிபிஐ அலுவலகம் வளாகத்தில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்றுக் காலை 11 மணிக்கு சிபிஐ அலுவலகம் வந்த கெஜ்ரிவால் முதல் மாடிக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு ஊழல் தடுப்பு பிரிவு துறையினர் இவரிடம் ஒன்பது மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், இரவு 8.30 மணிக்கு சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியேறினார். அப்போது அங்கு கூடியிருந்த அவரது கட்சித் தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார்.
தொடர்ந்து அங்கு குவிந்திருந்த செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அரவிந்த் கெஜ்ரிவால், ''சிபிஐ என்னிடம் 9.50 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது. மதுபானக் கொள்கை ஊழல் என்பது முற்றிலும் போலியானது. எங்களது ஆம் ஆத்மி கட்சியை முடித்துக் கட்ட வேண்டும் என்று சூழ்ச்சி செய்கின்றனர். ஆனால், நாட்டு மக்கள் எங்களுடன் இருக்கின்றனர். என்னை நல்லபடி உபசரித்த சிபிஐக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னிடம் நல்ல முறையில் நடந்து கொண்டனர். அவர்கள் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் அளித்து இருக்கிறேன். என்னிடம் 56 கேள்விகள் கேட்டனர். அனைத்தும் மதுபானக் கொள்கை சம்பந்தப்பட்டது. ஏன் இந்தக் கொள்கை ஆரம்பிக்கப்பட்டது என்று கேட்டனர். அதற்கும் பதில் அளித்து இருந்தேன்'' என்றார்.
இதற்கு முன்னதாக பிப்ரவரி 26ஆம் தேதி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டு இருந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் திருப்தி அடையாத காரணத்தினால் கைது செய்யப்பட்டார் என்ற தகவல் வெளியாகி இருந்தது. இதையடுத்து தனது துணை முதல்வர் பதவியை மணீஷ் சிசோடியா ராஜினாமா செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கெஜ்ரிவால் சார்பில் யாரும் வாதாட வேண்டாம்... வழக்கறிஞர்களிடம் அஜய் மக்கன் வேண்டுகோள்!!