
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட பின்னடைவு, சிக்கல்கள், ரூபாய் நோட்டு தடை ஆகியவற்றை திறம்பட கையாளாத காரணங்களால் நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்து அருண்ஜெட்லி நீக்கப்படலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.
கருப்பு பணம், ஊழல், கள்ளநோட்டுகளை ஒழிக்கும் நோக்கில் பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர்8 -ந்தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகளை தடை செய்தார். அதில் இருந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பின்னடைவு ஏற்படத் தொடங்கியது. மேலும், ஜி.எஸ்.டி. வரியை திறமையை அமல்படுத்தாததாலும் வர்த்தகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதனால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதத்தில் இருந்து 5.7 சதவீதமாகக் 2-ம் காலாண்டில் குறைந்தது. உள்நாட்டு உற்பத்தி சரிந்து வருவது, வேலைவாய்ப்பு பிரச்சினை அதிகரித்து இருப்பது, பணவீக்கம் உயர்வு ஆகியவை ஆளும் பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசுக்கு பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருப்பதை பிரதமர் மோடியே நேற்று முன்தினம் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், பொருளாதார சூழல், நிலவும் பிரச்சினைகள் குறித்து பா.ஜனதா தலைவர் அமித்ஷா, நிதி அமைச்சர் அருண்ஜெட்லி ஆகியோருடன் பிரதமர் மோடி தனது இல்லத்தில் நேற்று முன்தினம் மாலை கலந்தாய்வு நடத்தினர்.
இந்த கூட்டம் முடிந்தபின், நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பிரதமர் மோடியின் இல்லத்தில் இருந்து விடைபெற்றுச் சென்றார். ஆனால், அதன்பின், பிரதமர் மோடியும், கட்சித் தலைவர் அமித்ஷாவும் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த ஆலோசனையில் முக்கிய முடிவு முன்வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதாவது நாட்டின் பொருளாதார சூழலைக் கருதி, நிதி அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவது என முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது. நிதி அமைச்சக வட்டாரங்களும் இந்த தகவலை உறுதி செய்துள்ளதாக ‘தி நேஷனல் ஹெரால்டு’ இணையதளம் தெரிவித்துள்ளது.
ஒருவேளை அருண்ஜெட்லி நிதி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டால், அவருக்கு உள்துறை அமைச்சர் பொறுப்பு தரப்படும். உள்துறை அமைச்சராக இருக்கும் ராஜ்நாத் சிங் துணை பிரதமர் பொறுப்புக்கு உயர்த்தப்படுவார் எனத் தெரிகிறது.
மேலும், பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோருடான ஆலோசனைக்கு பின், அருண் ஜெட்லி, பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராம், வர்த்தகத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, கனரக தொழில்துறை அமைச்சர் ஆனந்த கீதே, விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் கஜபதி ராஜூஆகியோருடன் நிதி அமைச்சகத்தில் வைத்து ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும், நேர்முக வரிகள் வாரியத்தின் தலைவர் சுனில் சந்திராவுடனும் தனியாக ஜெட்லி பேசியுள்ளார்.
இந்த தகவல் எப்படியோ நிருபர்களுக்கு கசிந்து, ஜெட்லியிடம் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து கேட்டபோது, அதற்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார்.