
லண்டனில் தலைமறைவாக இருக்கும் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்டை டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
கிங்பிஷர் விமான நிறுவனம், மதுபான ஆலை போன்ற பல்வேறு தொழில்களை நடத்தி வந்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, வங்கிகளிடமிருந்து 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன்பெற்றுவிட்டு, அதனை திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார்.
அவரை இந்தியாவுக்குக் கொண்டுவர அமலாக்கத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை அவருக்கு நீதிமன்றம் மூலம் பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது.
ஆனால், விஜய் மல்லையா சம்மனை ஏற்று நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அவருக்கு டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் இன்று ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.