
காஷ்மீர் போராட்டத்தின்போது மனிதக் கேடயமாக இளைஞரை ஜீப்பில் கட்டியதற்காக விசாரணை வளையத்தில் உள்ள ராணுவ அதிகாரிக்கு சிறப்பு கவுரவம் வழங்கப்பட்டு இருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மனிதக் கேடயம்
கடந்த மாதம் நடைபெற்ற ஸ்ரீநகர் இடைத்தேர்தலின் போது பாரூக் அகமது தார் என்ற இளைஞர் ராணுவ ஜீப்பீன் முன் புறத்தில் கட்டப்பட்டு கலவரம் நடந்து கொண்டிருந்த பகுதிக்குள் கொண்டு வரப்பட்டார்.
ராணுவ வாகனத்தின் மீது போராட்டக்காரர்கள் கல் எறியாமல் தடுக்க இப்படி ஒரு நடவடிக்கையை மேற்கொண்டதாக ராணுவம் விளக்கம் அளித்தது.
சிறப்பு கவுரவம்
இது குறித்த புகைப்படம் சில நாட்கள் கழித்து வெளியாகி நாடு முழுக்க கடுமையான அதிர்வலைகளை உண்டாக்கியது. இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட ராணுவ அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று குரல்கள் எழுந்தன.
இந்நிலையில் பாரூக்கை ராணுவ ஜீப்பின் முகப்பில் கட்டிய ராணுவ அதிகாரி மேஜர் லீதுல் கோகாய்க்கு நேற்று முன்தினம் சிறப்பு பாராட்டுப் பத்திரம் அளித்து இந்திய ராணுவம் கவுரவித்துள்ளது. தீவிரவாதத்தை ஒடுக்க பல்வேறு எதிர் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு தலைமையேற்றதற்காக இந்த கவுரவம் வழங்கப்படுவதாக ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடரும் விசாரணை
பாரூக்கை ராணுவ ஜீப்பின் முகப்பில் கட்டியது தொடர்பான துறை ரீதியான விசாரணை வளையத்தில் மேஜர் கோகாய் தொடர்ந்து இருந்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு ராணுவ தலைமை தளபதியின் பரிந்துரையின் பேரில் பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையில், மேஜர் கோகாய் மீது ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையின்படி, விசாரணை தொடரும் என்று, காஷ்மீர் போலீஸ் ஐ.ஜி. முனிர்கான் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
விசாரணை
‘‘அவர் மீதான விசாரணைக்குப்பின், அதன் முடிவு வெளியிடப்படும். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துவிட்டாலே அதன்படி விசாரணை நடத்தி முடிக்கப்பட வேண்டும். விசாரணையின் தொடக்கம்தான் முதல் தகவல் அறிக்கை.
விசாரணையில் என்ன தகவல்கள் வெளியாகின்றன என்பது தனி விஷயமாகும். ஆனால் விசாரணை நடத்தப்பட்டு உண்மை கண்டறியப்படும்’’ என்று, அவர் மேலும் கூறினார். மேஜர்.கோகாய், ராணுவத்தில் ராஷ்டிரிய ரைபில்ஸ் படையணியைச் சேர்ந்தவர் ஆவார்.
பொருட்கள் வாங்க வந்தவர்
ராணுவ ஜீப்பின் முகப்பில் கட்டப்பட்ட பாரூக் தார், இதுவரை எந்த ஒரு போராட்டத்திலும் ஈடுபடாதவர் ஆவார். அன்றைய தினம் கடைக்கு பொருட்கள் வாங்க வந்தவரை ராணுவம் பிடித்து ஜீப்பில் கட்டியதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.