கார்கில் நினைவு தினம்: புல்லட்டில் புறப்படும் வீராங்கனைகள்!

By Manikanda Prabu  |  First Published Jul 17, 2023, 1:56 PM IST

கார்கில் நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில், முப்படைகளை சேர்ந்த வீராங்கனைகள் டெல்லியில் இருந்து கார்கில் நோக்கி இரு சக்கர வாகனத்தில் பேரணியாக செல்லவுள்ளனர்


கார்கில் விஜய் திவாஸ் தினத்தை முன்னிட்டு முப்படைகளை சேர்ந்த 26 பேர் கொண்ட பெண்கள் குழுவானது, டெல்லியில் இருந்து கார்கில் நோக்கி சுமார் 900 கிமீ இரு சக்கர வாகனத்தில் பேரணி செல்லவுள்ளது. டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் ஜூலை 18ஆம் தேதி (நாளை) தொடங்கும் இந்த பேரணியானது, ஜூலை 26ஆம் தேதியன்று டிராஸில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் முடிவடையவுள்ளது.

இந்த பேரணியை இந்திய ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே மற்றும் ராணுவ மனைவிகள் நல சங்க தலைவர் அர்ச்சனா பாண்டே ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைக்கவுள்ளனர்.

Tap to resize

Latest Videos

கார்கில் போரின் போது நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் தங்கள் உச்சபட்ச தியாகத்தை செய்து வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களை நினைவுகூரும் வகையில், இந்த இரு சக்கர வாகனப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெண் ஓட்டுநர்களால் நடத்தப்படும் இந்த பேரணி, பெண்களின் தைரியத்தை வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் “நாரி சக்தி”-களின் பங்கை ஊக்குவிக்கும் எனவும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த 9 நாட்கள் பேரணியில் கலந்து கொள்ளவுள்ள 26 பெண்களில், முப்படைகளில் பணிபுரியும் பெண்கள், பெண் அதிகாரிகள், ஓய்வு பெற்ற பணியாளர்களின் மனைவிகள், 'வீர் நாரி'-க்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். (போரிலோ அல்லது ராணுவ நடவடிக்கையிலோ தேசத்துக்காகத் தன் உயிரைக் கொடுத்த ஆயுதப்படை வீரர்களின் கைம்பெண் மனைவி, வீர் நாரி என்று அழைக்கப்படுகிறார்.)

மோடி மட்டும் போதுமே எதுக்கு 30 கட்சிகள்? மல்லிகார்ஜுன கார்கே விளாசல்!

இக்குழுவில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த இரண்டு வீர் நாரிகளும், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த பெண்கள் 11 பேர், இந்திய விமானப்படையைச் சேர்ந்த இருவர் மற்றும் இந்தியக் கடற்படையைச் சேர்ந்த பெண் ஒருவர் உள்பட 14 பேர் இடம்பெற்றுள்ளனர். மேலும், இரண்டு பெண் அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் தவிர, பணிபுரியும் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகளின் மனைவிகள் 8 பேரும் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் யாரேனும் ஏதாவது ஒரு காரணத்தால் பேரணியில் பங்கேற்க இயலாமல் போனால், அதனை ஈடு செய்யும் வகையும் இரண்டு அதிகாரிகளும் இருப்பு வைக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியின் போர் நினைவு சின்னத்தில் தொடங்கும் பேரணி, ஹரியானா, பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசம் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் போன்ற மாநிலங்களின் நகரங்கள் வழியாக டிராஸில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தை அடைவர். இந்திய ராணுவத்தின் வடக்கு கட்டளையின் கீழ் இந்த பேரணி நடத்தப்படுகிறது.

இந்தியாவுக்குள் கடந்த 1999ஆம் ஆண்டு அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் படைகள் கார்கில் பகுதியை முற்றுகையிட்டன. கார்கில் மட்டுமல்லாமல் அதைச் சுற்றியுள்ள கக்சார், ஹர்ட்ராஸ், திராஸ், படாலிக் போன்ற பகுதிகளையும் பாகிஸ்தான் ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. பாகிஸ்தான் பிடியிலிருந்து கார்கிலை மீண்டும் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக கார்கில் போர் நடத்தப்பட்டது. இந்த போருக்கு ஆப்பரேஷன் விஜய் என பெயரிடப்பட்டது.

உயரமான மலைப் பகுதியில் சுமார் 60 நாட்கள் நடைபெற்ற இந்த போரில் பாகிஸ்தான் ராணுவத்தை விரட்டியடித்து, கார்கிலை மீட்டது இந்திய ராணுவம். கார்கில் போர் முடிவுக்கு வந்த தினத்தை கார்கில் விஜய் திவாஸ் என அறிவித்து அப்போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26ஆம் தேதி அஞ்சலி செலுத்தப்படுகிறது. ஆப்பரேஷன் விஜய்யில் பங்கேற்ற வீரர்களின் பங்களிப்புகளுக்கு தகுந்த கவுரமாக டிராசில் உள்ள 5140 முனைக்கு கார்கில் துப்பாக்கி மலை எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!